வலதுசாரி சிந்தனையாளரான கிஷோர் கே.சுவாமி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எம்பி, எம்எல்ஏ.,கள் மற்றும் தலைவர்கள் பற்றி அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். மற்றவர்களை மட்டம் தட்டி டுவீட் போடுவது, பேஸ்புக்கில் போஸ்ட் போடுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார். பெண்கள் குறித்து மிகவும் மோசமான பதிவுகளையும் பதிவிட்டு வந்துள்ளார்.  இந்தச் சூழலில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்நிலையில் அவர் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் என்னென்ன?


தருமபுரி எம்பியை விமர்சித்த சர்ச்சைக்குரிய பதிவு:


தருமபுரி திமுக நாடாளுமன்ற எம்பி செந்தில்குமாரை கடந்த ஜனவரி மாதம் கடுமையாக விமர்சனம் செய்து ட்விட்டரில் ஒரு பதிவை செய்திருந்தார். அந்தப் பதிவில் தருமபுரி எம்பியை தகாத வார்த்தைகளால் கிஷோர் கே சாமி திட்டியிருந்தார். இதற்கு தருமபுரி எம்பியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்திருந்தார். 


 






நீட் மாணவர் தற்கொலை தொடர்பான பதிவு:


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து அல்லது அத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சில மாணவ மாணவியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த சமயத்தில் கிஷோர் கே. சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சரளமாக ஆங்கிலத்திலோ தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுத வராது என்றாலும் படிக்குற எல்லோரும் டாக்டர் ஆயிடனும் , அப்புறம் யார் தான் பேஷண்ட் ???? எல்லாரும் பல்லக்குல ஏறிட்டா பல்லக்கை யார் தான் தூக்குறதாம் ??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள் தான்" எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவு பெருமளவில் சர்ச்சையானது. 


 











நடராஜனின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு ட்வீட்:


இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் தேர்வாகி முதல் முறையாக களமிறங்கினார். அப்போது அவர் தன்னுடைய முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த சமயத்திலும் கிஷோர் கே சாமி செய்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு ஒரு ட்விட்டர் பதிவை செய்திருந்தார். இதை பலரும் கண்டித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.


 






இந்தச் சூழலில் தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா தொடர்பாகவும் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை செய்துள்ளார். அதில், "அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. பாரதிதாசன் 1958" எனப் பதிவிட்டுள்ளார். 


 






இந்தப் பதிவு மற்றும் தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர்  ஸ்டாலின் தொடர்பான அவதூறும் பரப்பியதற்காக இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவை செய்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது