மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு, நிதி, சலுகைகள் 2என பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.


மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


கவனம்‌ மிகுதியாகத்‌ தேவைப்படுவோரில்‌ குறிப்பிடத்தக்க பிரிவினர்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆவார்கள்‌. மாற்றுத்திறனாளிகளின்‌ உரிமைகளைக்‌ காக்கவும்‌ அவர்கள்‌ சமுதாயத்தில்‌ சமநிலையில்‌, சுயமரியாதையுடன்‌ வாழும்‌ நிலையினை உறுதி செய்யவும்‌ 2011-ஆம்‌ ஆண்டில்‌ கலைஞரால்‌ இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள்‌ மீது சிறப்புக்‌ கவனத்தோடு இத்துறையை நானும்‌ எனது தனி கவனிப்பில்‌ வைத்திருக்கிறேன்‌.


* நமது அரசு பொறுப்பேற்றவுடன்‌, மாற்றுத்திறனாளிகள்‌ பராமரிப்பு உதவித்தொகை ரூபாய்‌ ஆயிரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, தற்போது ரூபாய்‌ இரண்டாயிரம்‌ வழங்கப்படுகிறது. இதனால்‌, 2 இலட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளி பயனாளிகள்‌ பயனடைந்து வருகின்றனர்‌.


* மனவளர்ச்சி குன்றிய மற்றும்‌ புற உலகச்‌ சிந்தனையற்ற குழந்தைகளின்‌ பெற்றோர்களுக்குத்‌ தொழில்‌ தொடங்க உதவி செய்ய, குறைந்தபட்சக்‌ கல்வி தகுதியினை எட்டாம்‌ வகுப்புத்‌ தேர்ச்சியாக குறைத்தும்‌, வயது உச்ச வரம்பை 45-லிருந்து 55 ஆக உயர்த்தியும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.


* மாற்றுத்திறனாளிகள்‌ துணையாளர்‌ ஒருவருடன்‌ கட்டணமின்றி நகரப்‌ பேருந்துகளில்‌ பயணம்‌ செய்ய ஏதுவாக உத்தரவிடப்பட்டுள்ளது.


* உதவித்தொகை மற்றும்‌ உதவி உபகரணங்கள்‌ வேண்டி காத்திருப்போர்‌ அனைவருக்கும்‌ நிலுவையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தும்‌ நமது அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது.


* வீடு வழங்கும்‌ திட்டத்தில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 விழுக்காடு வீடுகள்‌ வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதேபோல்‌ வீட்டு மனைப்‌ பட்டா வழங்குவதற்கும்‌ ஆணை வழங்கப்பட்டுள்ளது.


* சிறப்புப்பள்ளிகள்‌ மற்றும்‌ ஆரம்பநிலைப்‌ பயிற்சி மையங்களில்‌ பணியாற்றும்‌ ஆயிரத்து 294 சிறப்பாசிரியர்கள்‌ மற்றும்‌ தசைப்‌ பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம்‌ ரூபாய்‌ 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.


* சென்னை மாவட்டத்தில்‌ ஒரு அலுவலகம்‌ ஒரு கோடியே 51 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ அமைக்கப்பட இருக்கிறது.


* சாலை ஓரங்களில்‌ வியாபாரம்‌ செய்வதற்காகத்‌ தள்ளுவண்டி கடை நடத்துவதற்கான சான்றிதழ்களை முன்னுரிமை அடிப்படையில்‌ வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.


*  திருமண நிதியுதவியானது இனிமேல்‌ முழுமையாக ரொக்கமாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.


* அரசு வளாகங்களில்‌ மாற்றுத்திறனாளிகள்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கத்‌ தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




* ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள்‌ நல வாரியம்‌ மற்றும்‌ ஆலோசனை வாரியம்‌ மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.


* அனைத்து மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ முக்கிய நிகழ்வுகளின்‌போது செவித்திறன்‌ பாதிக்கப்பட்டோர்‌ பயன்பெறும்‌ வகையில்‌, சைகை மொழிபெயர்ப்பாளர்‌ வசதி மாவட்ட நிர்வாகம்‌ மூலம்‌ செய்து தர ஆணையிடப்பட்டுள்ளது.


* மாற்றுத்திறனாளிகளின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில்‌ 4 விழுக்காடு இட ஒதுக்கீடும்‌, தனியார்‌ துறைகளிலும்‌ வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக்‌ கண்டறிய வல்லுநர்‌ குழு அமைத்தும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


* மாவட்ட அளவில்‌ சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள்‌ அமைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில்‌ வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக்‌ கண்காணிப்பு குழுவும்‌ அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


* மாற்றுத்‌ திறனாளிகளுக்குப்‌ பொது இடங்களில்‌ தடையற்ற சூழலை அமைக்கும்‌ நடவடிக்கையாக, சாய்தளப்‌ பாதை, மின்தூக்கி பொருத்துதல்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கான கழிவறை, பார்வையற்றோர்‌ பயன்பாட்டிற்காக தரைத்‌ தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.


* செவித்திறன்‌ குறைபாடு உடையோருக்கு தகவல்‌ பரிமாற்றம்‌ செய்ய தகவல்‌ பலகைகள்‌, சைகை மொழி பெயர்ப்பாளர்கள்‌ நியமனம்‌ போன்ற வசதிகள்‌ செய்ய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


* 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளைக்‌ கண்டறிவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடைய (Standard Operating Procedure (501) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


* மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உரிமைகள்‌ திட்டம்‌ உலகவங்கி நிதியுடன்‌ ஆயிரத்து 763 கோடியே 19 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில்‌, அனைத்து மாவட்டங்களிலும்‌ இந்தத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌.


* மாற்றுத்திறனாளிகளின்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியும்‌, அரசின்‌ தற்போதுள்ள திட்டங்களுடன்‌ ஒருங்கிணைத்து இதர அரசுத்‌ துறைகளின்‌ மூலம்‌ தொழில்திறன்‌ பயிற்சியும்‌ அளிக்கப்படும்‌.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.