செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அப்பு கார்த்தி என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையோடு நிறுத்தாமல், செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும் (22) அந்தக் கும்பல் கொன்றது. செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகிலே இந்த கொலை நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அந்த இளைஞர்கள் குழு,  இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது "செங்கல்பட்டு எங்களுடைய கண்ட்ரோலுக்கு வந்தது" என கத்திக்கொண்டு சென்றனர். கொலை நடைபெற்றதிலிருந்து செங்கல்பட்டு நகரம் அச்சத்தில் இருந்து வந்தது.

 



இந்த இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் மாமண்டூர் பாலாறு அருகே காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். மேலும் மாதவன் மற்றும் ஜெசிகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  அதேசமயம் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர். ஜெசிகா என்பவர் இந்த கொலைக்கு மூளையாக இருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜெசிகா அவரது கணவன் அசோக் செங்கல்பட்டு பகுதியில் பிரபல நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் ஜெசிகா மற்றும் மாதவன் ஆகிய இருவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் சேர்ந்து கொண்டு மற்றொரு , கொலை சம்பவம் செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயத்தமாகி இருந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததால், அவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

 

இந்நிலையில் செங்கல்பட்டு நகர் பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாதவன் மற்றும் ஜெசிகா ஆகிய இருவர் சுற்றித் திரிந்து உள்ளனர். செங்கல்பட்டு நகர காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மாதவனை கைது செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புக்குரிய இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.