CM Sstalin PM Modi: பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான நிதியை கேட்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி விரைந்துள்ளார்.
பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்:
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக உரிய நிதியை வழங்குமாறு வலியுறுத்த உள்ளார். மேலும், தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் இடைக்கால நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதமரும், முதலமைச்சர் ஸ்டாலினும் சந்திப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு:
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, ஏராளமான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தீவிர மிட்பு பணிகளுக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் 6000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வேண்டும் என்று மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். மத்திய அரசு சார்பிலும் இடைக்கால நிதியாக 450 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மத்தியக் குழு ஆய்வு:
இதனிடையே, தமிழகம் வந்த மத்தியக் குழுவும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு டெல்லி சென்றிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த குழு பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மாவட்டங்களில் பெருமழை:
இந்த சூழலில் தான் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி வருகிறது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும் அதிகப்படியான மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீர்நிலைகள் மூழ்கி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.