நாட்டின் குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா நாளை பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றுகிறார்.
குடியரசு தின விழா:
தமிழ்நாட்டில் நாளை கம்பீரமான அணிவகுப்புகளுடனும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடனும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா வழக்கமாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெறுவது வழக்கம் ஆகும். ஆனால், நடப்பாண்டில் குடியரசு தின விழா அணிவகுப்பு காந்தி சிலைக்கு பதிலாக உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உழைப்பாளர் சிலை:
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25-ந் தேதி முதல் 26-ந் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்ளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சிகள்
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் கம்பீரமான அணிவகுப்புகளுடன் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, கடந்த சில வாரங்களாக மெரினா கடற்கரையில் உள்ள சாலையில் ஒத்திகை நடைபெற்று வந்தது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்பட தலைநகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறக்கூடாது என்பதற்காக பலத்த கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.