தமிழ் மொழிக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவு கூறும் “மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்” இன்று அனுசரிக்கப்படுகிறது. 


மொழிப்போர் தியாகிகள் 


கடந்த 1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையில் ராஜாஜி இந்தி படிப்பதை மேல்நிலை கல்வியில் கட்டாயமாக்கினார். இதனால் கொதித்தெழுந்த பெரியார் தனது சுயமரியாதை இயக்கம் மூலமும், நீதிக்கட்சி மூலமும் போராட்டங்களை நடத்தினார். இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1939 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நடராசன் என்பவன் சிறையிலேயே உயிர் நீத்தார்.


தொடர்ந்து அடுத்த இரு மாதத்தில் தாளமுத்து என்பவரும் சிறையில் மரணித்தார். போராட்டம் தீவிரமானதால் இந்தி மொழி தொடர்பான அரசாணை திரும்ப பெறப்பட்டது. பின்னர் இந்தியா விடுதலை அடைந்த பிறகு 1965 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் அண்ணா தலைமையிலான திமுகவின் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் மரணமடைந்தனர். 


நெருக்கடி அதிகரித்ததால் வேறு வழியின்றி இந்தியும், ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என முடிவுக்கு மத்திய காங்கிரஸ் அரசு வந்தது. இந்த போராட்டத்தின் தாக்கமே தமிழ்நாட்டில் 1967ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்க காரணமாக அமைந்தது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அடித்தளமாகவும் அமைந்தது. 


நினைவு தினம்


மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றளவும் எப்போதெல்லாம் மத்திய அரசு மொழித் திணிப்பு நடவடிக்கையில் இறங்கும் போதெல்லாம் மொழிப்போரே நினைவு  கூறப்படுகிறது. 


தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் 


மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.