74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கொடி ஏற்றுகிறார்.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாகும். அதன்படி இந்திய நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
களைக்கட்டிய தமிழ்நாடு
முன்னதாக தமிழ்நாட்டில் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களை கவர்ந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா, இம்முறை மெட்ரோ பணிகளால் உழைப்பாளர் சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது.
அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தில் காலை 8 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றுகிறார். அதற்கு முன்பாக காலை 7.50 மணியளவில் காவல்துறை வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தருவார். பின்னர் ராணுவத்தினரின் வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு வருகை தருவார்.
இருவருக்கும் தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைப்பார்.
அணிவகுப்பில் கூடுதல் சிறப்புகள்
அதனை தொடர்ந்து ஆளுநர் 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைப்பார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்படும். தொடர்ந்து முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறும். கூடுதல் சிறப்பாக பெண்கள் சிறப்பு காவல் படையின் கூட்டுக்குழு முரசு இசை நிகழ்ச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருது போன்றவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். தொடர்ந்து அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெறும்.
இதேபோல் தமிழ்நாடின் கரகாட்டம், சிலம்பாட்டம், பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், குல்பாலியா நடனம் (ராஜஸ்தான்), கோலி நடனம் (மகாராஷ்ட்ரா), பாகுரும்பா நடனம் (அசாம்) நடைபெறுகிறது.
5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று சென்னையில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.