Republic Day 2023 : சென்னையில் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் இறுதி கட்டம் இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


குடியரசு தினம்


1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தாலும், இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதியே கிடைத்தது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ந் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் (ஜனவரி 26ஆம் தேதி) நாட்டின் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.


டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் கோலாகளமாக நடைபெறும். அந்தவகையில் சென்னையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் ஒத்திகை


இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல்துறை, தீயணைப்புத்துறை அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.


இந்த நிலையில், இந்தாண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பள்ளி மாணவ, மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் இந்தாண்டு குடியரசு தினவிழாவில் இடம்பெறுகிறது.  அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்த வழியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


டெல்லியில் ஒத்திகை


இதேபோன்று டெல்லியிலும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.  டெல்லி கடமையின் பாதையில் குடியரசு தினவிழா முழு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அங்கு முப்படைகளும் பங்கேற்றன. பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அதைப்போல ஒட்டகப் படையும் அணிவகுத்தன. அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநில கலச்சாரம் காண்பிக்கப்பட்டு இருந்தன.


குறிப்பாக தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் பெண்கைளை மையப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊர்தியின் முகப்பில் ஔவையாரின் உருவம் பிரமாண்டமாக காட்சி அளித்தது. அது ஒரு மண்டபத்தின் மேலே இருப்பது போன்று காட்சியளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து வீரமங்கை வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்டவர்களின் சிலைகள் இருப்பதாக தெரிகிறது.


டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்த்தி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.