சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்த விராலிமலையைச் சேர்ந்த முத்து கண்ணாம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில், நான்கு  பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த  7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.


இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகள் பத்ம விருதுகள். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன.


கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமை சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


தலைசிறந்தும், அரிய வகையிலும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விபூஷன், மிக உயரிய வகையில் தலைசிறந்து சேவையாற்றியவர்களுக்கு பத்ம பூஷன், எந்த துறையிலும் தலைசிறந்து பணியாற்றியவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,  தமிழ்நாட்டின் விராலிமலையைச் சேர்ந்த சதிர் கலைஞரான முத்து கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 90 வயதுடைய முத்து கண்ணம்மாள் சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்தவர் ஆவார்.


7 வயதில் விராலி மலை சுப்ரமணியசாமிக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்ட முத்து கண்ணம்மாள், ஆங்கிலேயர் காலத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார். 1947ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்த பின்னர் கோயில் சேவகத்தைப் பலர் நிறுத்திவிட்டாலும், தான் நடனமாடுவதை இன்னும் நிறுத்தவில்லை என்றும் பேட்டி ஒன்றி முத்து கண்ணம்மாள் கூறியுள்ளார்.




முத்து கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக முத்துகண்ணம்மாளுக்கு எனது வாழ்த்துக்கள். ஏழாவது தலைமுறை சதிர் நடனக் கலைஞர் மற்றும் விராலிமலையில் உள்ள முருக கோயிலில் 32 சமகாலத்தவர்களில் எஞ்சியிருக்கும் ஒரே நடனக் கலைஞர். போராட்டங்கள் இருந்தபோதிலும் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காத இளம் வளரும் கலைஞர்களுக்கு முத்துகண்ணம்மாள் ஒரு உத்வேகமாக இருக்கிறார்’ எனப் பதிவிட்டுள்ளார்.






 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண