அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக பாஜக மாநில துணை தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக உண்ணாவிரதம் நடத்தியது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், கலந்துகொண்டு பேசிய நயினார் நாகேந்திரன், " மாணவியின் மரணத்துக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அதிமுக இல்லை. அமைதியின் உருவமாக உள்ளது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே" என்று தெரிவித்தார். இவரின், இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் மிகுந்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்….!! " என்று காட்டாமாக விமர்சித்தார்.
அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது ட்விட்டரில், "பொங்கல் பரிசு ஊழல் முதல் சட்ட ஒழுங்கு சீர்கேடு வரை அதிமுக தலைமைகள் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்ததால்தான் அவை வெளிச்சத்திற்கு வந்தன. நயினார் நாகேந்திரனுக்கு முதுகெலும்பு இருந்தால் பதவி விலகி, அதிமுக தயவில்லாது வென்று சட்டமன்றத்தில் நுழைந்து ஆண்மையை நிரூபிக்கலாமே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், தனது கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், " இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்" என்று தெரிவித்துள்ளார்.