ஜவுளித் தொழிலுக்குப் பெயர்போன கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான துணிகள் விசைத்தறிகள் மூலம் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கோவை அவினாசி, மங்கலம், சோமனூர், தெக்கலூர், காரணம்பேட்டை, திருப்பூர் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறித் தொழிலே அங்கு வசிப்போரின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. 


மேலே குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் விசைத் தறிகள் இயங்கி வருகின்றன. சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் இந்த விசைத்தறிகளை வைத்துள்ளன. அவர்களுக்குக் கீழ் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 


நேரடியாக 2 லட்சம் பேர், மில் தொழிலாளிகள், சரக்கை ஏற்றி, இறக்குவோர், ஓட்டுநர்கள், நூலைப் பதப்படுத்தும் தொழிலாளிகள், பாவு நூல் கொடுப்போர், சரக்கின் தரத்தைப் பரிசோதிப்போர் என மறைமுகமாக 3 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் விசைத்தறித் தொழிலால் பயனடைந்து வருகின்றனர். இவர்களின் மூலம் தினந்தோறும் சுமார் 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி ஆகும். 


விசைத்தறித் தொழில்: விரிவான பார்வை


காட்டில் விளையும் பருத்தியைக் கொட்டை எடுத்துப் பஞ்சாக்கி, அதை ஸ்பின்னிங் மில்லில் நூலாக்கி, அந்த மூலப்பொருளை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத் தறியாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். தரப்படும் நூலைத் தரமிக்க, நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது கோவை, திருப்பூர் விசைத் தறியாளர்களின் பணியாக உள்ளது. இது சோமனூர் ரகம். அந்த நூலில் வரும் கழிவை எடுத்து, மீண்டும் நூலாக்கி நெய்வது பல்லடம் ரகம். 




இரண்டு ரக நூல்களையும் பெற்றுக்கொண்டு துணியை நெசவு செய்து கொடுப்பதன் அடிப்படையில், விசைத்தறி உரிமையாளர்களுக்கு மீட்டர் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகிறது. மூலப்பொருளைக் கொடுத்து, நெசவு செய்த துணியைப் பெற்றுகொள்ளும் ஜவுளி உற்பத்தியாளர்களே இந்தக் கூலியை வழங்குகிறார்கள். 


விசைத்தறி உரிமையாளர்கள் அவர்களுக்குக் கீழே பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்தக் கூலியில் இருந்துதான் ஊதியத்தை வழங்கி வருகின்றனர். உதிரிபாகங்கள், தறி பழுதுச் செலவு, தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆகியவைபோக மிச்சமாகும் தொகையே விசைத்தறி உரிமையாளர்களுக்கான வருமானம். விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கூலி உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது.


8 ஆண்டுகளாக உயராத கூலி


இதற்கிடையே 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு கூலிப் பணம் உயர்த்தப்படவே இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


1987 முதல் பெரும்பாலும் பேச்சுவார்த்தை / போராட்டம் நடத்தியே தங்களுக்காக கூலிப்பண உயர்வைப் பெற்று வருவதாகவும் 8 ஆண்டுகளாக அதுவும் கிடைக்கவில்லை என்கிறார் கோவை - திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் அப்புக்குட்டி. ''வழக்கமாக ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கலந்துகொள்வர். 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் அரசுப் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள முடியவில்லை. தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்துக்கு 30%, பிற ரகங்களுக்கு 27 சதவீதமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.




இதை சோமனூர் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றாலும் பல்லடத்தில் ஏற்கவில்லை. இதனால் பல்லடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மாதம் போராட்டம் நடைபெற்றது. உடனே கூலி உயர்த்தப்பட்டு 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. மீண்டும் குறைக்கப்பட்டு, போராட்டத்தால் 3 மாதங்கள் உயர்த்தப்பட்டு மீண்டும் குறைக்கப்பட்டுவிட்டது. சில ரகங்களுக்கு மட்டும் தற்போது உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்பட்டு வருகிறது. 


இதற்கிடையே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் நாங்கள் கூலி உயர்வுக்கான போராட்டத்தில் ஈடுபடமுடியவில்லை. மீண்டும் கடந்த 6 மாத காலமாக, ஜவுளி உற்பத்தியாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், தொழிலாளர் நலத்துறை எனப் பலதரப்பிடம் 14 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் உரிய தீர்வு எட்டப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர், கோவை ஆட்சியர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டது. 


40 நாட்கள் காத்திருந்து போராட்டம்


டிச.1 முதல் பல்லடம் ரகங்களுக்கு 20%, சோமனூர் ரகங்களுக்கு 23% தரவேண்டும் என்று கூறப்பட்டது. எனினும் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. 40 நாட்கள் (ஜன.9 வரை) காத்திருந்து, பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்காத நிலையில் போராட்டத்தைத் தொடங்கினோம். 17வது நாளாக இன்றும் (ஜன.25) போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 


தற்போது துணி வகைகளைப் பொறுத்து 1 மீட்டருக்கு அதிகபட்சம் 6 ரூபாய் 30 பைசாவும் குறைந்தபட்சம் 2 ரூபாய் 75 பைசா வரையிலும் தரப்படுகிறது. இதில் 20 சதவீதத்தை மட்டுமே உயர்த்தித்தரக் கேட்கிறோம். 




கூலி உயர்த்தப்படாததால், எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் கூலியை உயர்த்திக்கொடுக்க முடியவில்லை. அதற்கு ஈடுகட்ட அவர்களுக்கான வேலையைக் கூட்டி, சம்பளத்தை வழங்குகிறோம். நாங்களும் தொழிலாளிகளாக மாறி, துணிகளை நெய்து வருகிறோம். இதனால்தான் விசைத்தறித் தொழில்கள் நசித்துப்போகாமல் இருக்கின்றன'' என்கிறார் அப்புக்குட்டி.


மதிப்புக்கூட்டப்பட்டு அதிக விலைக்கு விற்பனை


இங்குள்ள விசைத்தறியாளர்கள் நெய்யும் துணிகளுக்கு வண்ணம் சேர்த்து, பல்வேறு வடிவங்களை அச்சிடும் வசதிகள் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே உள்ளன. ஈரோடு, கரூர் பகுதிகளில் குறைந்த அளவிலேயே வண்ணமேற்றி, அச்சிடப்படுகின்றன. இதனால் விசைத்தறியில் இருந்து நேரடியாகத் துணியை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள் அவற்றை வடமாநிலங்களுக்கு விற்கின்றனர். 




அந்தத் துணிகள் அகமதாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கேயே வண்ணங்கள் சேர்க்கப்பட்டு, தேவையான டிசைன்கள் அச்சிடப்பட்டு மீண்டும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மறுவிற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் தயாராகும் துணி, மதிப்புக்கூட்டப்பட்டு அதிக விலையில் விற்கப்படுகிறது. 


அடுத்தகட்ட நடவடிக்கை


அறிவித்த கூலி உயர்வைக் கொடுக்காததைக் கண்டித்து காரணம்பேட்டை அருகே நேற்று (ஜன.24) விசைத்தறி உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஜன.27ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்கிறார் அப்புக்குட்டி. 


மேலும் பேசிய அவர், ''8 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கான கூலிப் பணத்தை உயர்த்திக் கொடுக்க முடியாமல் காரணம் தேடுகிறார்கள். இதற்கும் அப்போதைய அறிவிப்பான 20%-ஐத்தான் கேட்கிறோம். 2, 3 மடங்கு உயர்த்திக் கேட்கவில்லை. துணி கெட்டுப்போகும் பொருளில்லை என்பதை ஜவுளி உற்பத்தியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கிறார் அப்புக்குட்டி. 



கோவை - திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் அப்புக்குட்டி


பிற மாநிலங்களுடன் போட்டிபோட்டு விற்க முடியவில்லை
 
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருவர் கூறும்போது, ''2011-ல் 35 சதவீதம் எனக் கொடுக்கவே முடியாத அளவுக்குக் கூலிப்பணத்தை உயர்த்தியதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அந்தத் தொகையை 1 மாதம் கொடுத்துப்பார்த்துவிட்டு முடியாததால் கைவிட்டோம். 


3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலிப் பணத்தை உயர்த்திக் கொடுப்பது வழக்கமில்லை. அதை அவர்களே வழக்கமாக்கிக் கொண்டார்கள். இப்போது மத்திய அரசு மானியங்களோடு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் நெசவுத் தொழில் தொடங்கப்பட்டுவிட்டது. அங்கெல்லாம் தமிழ்நாட்டைவிடக் குறைவான கூலிக்கு நெய்துகொடுப்பதால், நம்முடைய சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அவர்களுடன் போட்டிபோட்டு எங்களால் விற்க முடியவில்லை. இந்த சூழலில் நட்டத்தில்தான் சரக்கை விற்று வருகிறோம். 


இருப்பினும் 10 சதவீதம் வரை உயர்த்தித் தரத் தயாராக இருக்கிறோம். சந்தை சூழலைப் பொறுத்துக் கூடுதலாகத் தருவதாகவும் உறுதி அளித்துள்ளோம். ஆனால் அதற்கு விசைத்தறி உரிமையாளர்களில் ஒருசாரார் ஏற்றுக்கொண்டாலும் இன்னொரு சாரார் ஏற்க மறுக்கின்றனர். இதனாலேயே போராட்டம் தொடர்கிறது'' என்று தெரிவித்தார். 


அரசு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறை உற்பத்தியாளர்களிடையே காலங்காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் சரியான தீர்வு எட்டப்படுவதே இல்லை. இது இரு தரப்பினருக்குமான பிரச்சினை என்று மட்டும் பாராமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி தேங்கிக் கிடப்பதை அரசு உணர வேண்டும். 


இந்த நிலை நீடித்தால் அது நிச்சயம் மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். எனவே அரசு முன்வந்து உரிய பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே இரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.