இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஓட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரை பகுதியில் நீண்ட நெடுஞ்சாலை ஆக இருக்கும் தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் இன்னமும் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் சிலர் நெடுஞ்சாலையில் வரும் கார்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் வீல் சாதகத்தில் ஈடுபட்டு வருகிறது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வீலிங் எனப்படும் டூவீலர் சாகசத்தில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு, அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.
புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்வதுடன், புயலில் அழிந்துபோன துறைமுக நகரமான தனுஷ்கோடிக்கு சென்று அப்பதியில் இணையும் மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடல் பகுதிகளையும், புயலில் எஞ்சிய கட்டட இடிபாடுகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் வருட பிறப்பு ஆகியவற்றுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த ராமகாதை நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் யாத்திரைகள் மேற்கொள்வோர், ராமேஸ்வரத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.
இவ்வாறு குவிந்துள்ள பக்தர்கள் தங்கள் வழிபாடு, பூஜைகளை முடித்துவிட்டு தனுஷ்கோடிக்கு சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் செல்கின்றனர். நீண்ட கடற்கரை மற்றும் சவுக்கு மர காடுகள் சாலையின் இருபுறமும் அமைந்திருக்க, ஆங்காங்கே உருவாகும் நகரும் மணற் குன்றுகளும், கடல் அலைகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு அளவில்லா ஆனந்தத்தை தருகிறது.
ஆனால் கடந்த சில நாள்களாக இந்த ஆனந்தத்திற்கு இடையூறு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் இளைஞர்கள் சிலர் வீலிங் எனப்படும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென உச்சிப்புளி பகுதியில் இருந்து வரும் சிலர், உள்ளூர் இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைஞர்களின் இச்செயல்களை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உருவாகுவதுடன், அச்சத்துடனேயே பயணிக்கும் சூழலும் எழுந்துள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் அச்சத்தை போக்கும் வகையில், பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.