கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி, ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு கூறியது. 




கொரோனா நோய்த்தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ரெம்டெசிவிர்  மருந்துக்கு பல்வேறு இடங்களிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. பல இடங்களில் கள்ள சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக சென்னையில் ரெம்டெசிவருக்காக மக்கள் நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவர் கொடுக்கப்பட்ட வந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 




இந்நிலையில் இன்று, ரெம்டெசிவர் மருந்தை பெற நேரு ஸ்டேடியத்தில் மக்கள் குவிந்தனர். கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரெம்டெசிவருக்காக மக்கள் நெருக்கடியில் வரிசையில் நிற்கும் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஊரடங்கை அரசு தீவிரமாக்கி வரும் நிலையில் ரெம்டெசிவருக்காக ஒரே இடத்தில் இவ்வளவு மக்கள் கூடுவது அபாயகரமானது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.




இது குறித்து பதிவிட்டுள்ள கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர், இது கொரோனா கொத்தாக பரவும் வழி. இதனால் ஊரடங்கு பயனில்லாம போகும். ரெம்டெசிவர் உயிரைக்காக்கும் மருந்து  அல்ல.  தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அரசு உதவ வேண்டும். மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் 


 






ரெம்டெசிவருக்காக மக்கள் அலைவதை தடுத்து நேரடியாக மருத்துவமனைகளில் மருந்து கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது முறையாக நடவடிக்கை எடுத்து ரெம்டெசிவர் விற்பனையை சரியாக கையாண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.