தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. மேலும் அரசு குறிப்பிடும்படி தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை வசதிகள் காலியாக வைப்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால், படுக்கை வசதிக்காக காத்திருந்து ஆம்புலன்ஸ்களிலேயே ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் நிலையையும் பார்க்கமுடிகிறது. படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் இவற்றையெல்லாம் தவிர்த்து, 'ரெம் டெசிவிர்' என்று சொல்லக்கூடிய உயிர் காக்கும் மருந்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 80 நோயாளிகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

 

இந்த ரெம்டெசிவர்களுக்கு  கடும் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், இந்த மருந்தானது வெளியே கிடைப்பதில்லை என்பதால் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கும் விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு, தமிழ்நாடு மருந்தக கழகம் மூலம் விற்பனையை துவங்கியது. இந்நிலையில், மதுரை மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து இரு தினங்களுக்கு முன்பு விற்பனையைத் தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 500 பாக்ஸ் மருந்தும் விற்பனை ஆகிவிட்டது. 

 

ஒரு வயல் (Bootle) ரூ.1568,  ஆறு டோஸ் கொண்ட டப்பாவின் விலை ரூ.9408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்க மருத்துவர் பரிந்துரை கடிதம், நோயாளிகள் மற்றும் மருந்து வாங்க வருபவர்களின் ஆதார் அட்டை நகல், சி.டி ஸ்கேன், RTPCR பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

 

மதுரை,  திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவகல்லூரி முன்பாக குவிந்தனர். 80 நோயாளிகளுக்கு வழங்குவதற்கான மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதில் சிலருக்கு மருத்துவச் சான்றிதழ், மருத்துவ குறிப்புகள் என பல்வேறு காரணத்தை கூறி மருந்து இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பினர். தொடர்ந்து மருந்துகளை வாங்குவதற்காக நள்ளிரவு முதலே நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து அங்கிருந்த சிலர், "மருந்து இருப்பு குறித்து அரசு வெளிப்படையாக தெரிவித்தால் இது போன்ற போன்ற சிரமங்களை தவிர்க்கலாம்” என தெரிவித்தனர்.