தமிழகம் முழுவதும் மழையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்-வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.

 

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களின் தேவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 912 பயணிகளுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணை அடிப்படையிலான பணி நியமான ஆணைகளை வழங்கினார். 

 

 இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தவுடன் ஆறு மாத காலத்தில் ஏராளமான புதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 வாக்குறுதிகள் புதியத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் செயல்பாடுகளை, பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராட்டி வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களைச் சென்றடைய அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 



 

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள் தூர் வாரும் பணி அறிவிக்கப்பட்டதே தவிர, அந்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே ஏரிகள் தூர் வாரும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இங்கு புளோரைடு பாதிப்பின்றி குடிநீர் வழங்குவதற்காக கடந்த காலத்தில் ஒகேனக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை. இத் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 இதேபோல வேளாண் தொழிலை மேம்படுத்த நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கவும் நடவடிக்கையும் எடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வேளாண்மை பட்டைய கல்லூரிக்கு தேவையான வசதிகள் இல்லாததால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்பு இல்லை. தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும், விவசாய பயிர்களுக்கான மழை நிவாரணம் வழங்கப்படுவதில்லை. மாநிலம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், அதிகாரிகளை கொண்டு பயிர்களை முறையாக ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

 

இந்த கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பிஎன்பி இன்பசேகரன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.