விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் தாழ்வான பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதுவை மற்றும் தமிழ்நாட்டில் கடந்த 26 ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. 10 நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக புதுவை,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. புதுவையில் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வழக்கமாகப் புதுவையில் மழை வெள்ளம் தேங்கும் பாவாணர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், நடேசன் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாகப் புதுவையில் மழை இல்லாத சூழ்நிலையில், மீண்டும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த மழை காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையின் காரணமாகப் புதுவை, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இந்திரா காந்தி சிலை, சிவாஜி சிலை, புஸ்சி வீதியில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
இதனால் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே பெய்த தொடர் மழையின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை புதுச்சேரிக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, மீனவர்கள் அனைவரும் தங்களது விசை படகுகளை துறைமுகங்களில் பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட பாதிப்புகள்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழை இடைவிடாமல் தற்போது வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பி ஊருக்குள் தண்ணீர் போகும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் அருகே இருக்ககூடிய பம்பை ஆற்றில் வந்த வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் கடுமையாக சேதமடைந்தது . மேலும் அப்பகுதியில் தரைப்பாலம் மூழ்கியுள்ளதாக ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் ராஜபாளையம் அருகே வன்னிப்பேர் செல்லும் தரைப்பாலம் கனமழையால் தற்போது மூழ்கி உள்ளது. இதனால் வன்னிப்பேர் கிராமம் முழுவதும் தற்போது தீவு போல காட்சி அளிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறுவாடி கிராமத்தில் நீர்நிலைகள் நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் ஊருக்குள் புகுந்ததால் திண்டிவனம் மரக்காணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூனிமேடு பகுதியில் கடலுக்கு சென்ற 2 மீனவர்கள் திரும்பவில்லை என அப்பகுதி மக்கள் காவல்துறையினரும் முற்றுகையிட்டனர் இதைதொடர்ந்து அப்பகுதியில் கடலோர காவலர்கள் மூலம் தற்போது கடலில் ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:
தொடர் கண மழை காரணமாகவும், அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை எச்சரிக்கை இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவு, இதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று 19.11.21 ஓருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு