இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 13.10.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை மாதிரிகளின் (forecast models) அடிப்படையில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிய வருகிறது. 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழையும் பெய்யக்கூடும் என்று தெரிய வருகிறது.
இந்த நிலையில், நாளை (அக்.15) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாளை மறுநாள் (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கை
இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், 15.10.2024 முதல் 17.10.2024 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அறிவுரைகள் வழங்கினார்.
அதன்படி, 15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்துக
அதேபோல பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல்
அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
மருத்துவ வசதிகள்
ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.