வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அக்டோபர் 17ஆம் தேதி வரை அதி கன மழை பெய்யும் என்று எச்சரிகை அளிக்கப்பட்டுள்ளதால், சாலைப் போக்குவரத்து, மரம் விழுவதை உடனடியாக அகற்றுதல், வெள்ள நீரை ஏரி, ஆறுகளில் திருப்பிவிடுதல் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.


வடகிழக்குப் பருவ மழையை எதிர்நோக்கி தமிழ்நாடு அரசு சார்பில் முனெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு படையினர் பல மாவட்டங்களில் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்


இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடக்கிறது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


180 வெள்ள அபாய பகுதிகளில் கூடுதல் கவனம்


இந்த நிலையில் சென்னை முழுவதும் கடந்த ஆண்டு மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 180 அபாய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


43 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதாகவும் அங்கு உடனடியாகப் பணியை முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அதேபோல மழைநீர் தேங்கும் 25 பகுதிகளில் அதிக கவனம் வைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.