சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன் உடற்பயிற்சி முறை குறித்தும், தன் அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியான ரவி ஐபிஎஸ். 


உடற்பயிற்சி


காவல்துறை அதிகாரியின் உடற்தகுதியின் முக்கியத்துவம் குறித்து கேட்கப்பட்ட போது பேசிய ரவி ஐபிஎஸ், `சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. உடற்பயிற்சி மேற்கொண்டால் தான் உடல் நன்றாக இருக்கும்.. உடல் நன்றாக இருந்தால் தான் மனது நன்றாக இருக்கும். காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு ஓட வேண்டி வரும்.. அதனால் உடற்பயிற்சி செய்தால் தான் அதற்கேற்றவாறு உடலில் ஆற்றல் உருவாகும்.


இல்லையெனில் குற்றவாளி ஓடி விடுவான்.. நாம் பின்தங்கி விடுவோம். காவல்துறையினர் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்குப் பணிச்சுமை ஒரு காரணம் தான்.. ஆனாலும் காவல்துறையினர், அதிகாரிகள், காவலர்கள் அனைவருமே நாள் ஒன்றுக்கு வெறும் 40 நிமிடங்களாவது ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. அந்த நேரம் கூட ஒதுக்க முடியவில்லை எனக் கூறுவது வெற்றுக் காரணம். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்குத் தொப்பை வந்துவிடும்.. அவர்களால் தங்கள் ஷூவின் லேஸைக் கூட கட்ட முடியாதவாறு உடல் மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். 



`காக்க காக்க’ ..


தமிழ் சினிமாவில் காவல்துறை அதிகாரிகளாக காட்டப்பட்ட கதாபாத்திரங்கள் குறித்து பேசிய ரவி ஐபிஎஸ், `எனக்கு `காக்க காக்க’ படத்தில் வரும் சூர்யா கதாபாத்திரம் பிடிக்கும். அவருடைய `சிங்கம்’ கதாபாத்திரமும் பிடிக்கும்’ எனக் கூறினார். தன் வாழ்வில் சினிமாவைப் போலவே நிகழ்ந்த சம்பவம் ஒன்றைப் பற்றிய தன் அனுபவத்தைக் கூறிய அவர், `நான் விழுப்புரத்தில் எஸ்.பியாக இருந்த போது, 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காலம் அது. திண்டிவனத்தில் தேசியத் தலைவர் ஒருவரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்துவிட்டார்கள்.. அதனால் அந்தப் பகுதியில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டார்கள். மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையர், நான் ஆகியோர் அடுத்த மூன்ற நாள்களில் தேர்தல் நடக்க போகிறது என்பதையும், அப்போது அங்கிருந்த சூழலைப் பற்றி உரையாடவும் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டோம். தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் திண்டிவனம் சென்றார்கள்.. செருப்பு மாலை அணிவித்தவரைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி மக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.. சட்ட ஒழுங்கு கெடும் சூழல் உருவாகியிருந்தது’ எனக் கூறினார்.


திண்டிவனம் ..


தொடர்ந்து அவர், `எல்லாரும் சென்ற பிறகு, விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. திண்டிவனம் செல்லும் வழியில், யதேச்சையாக ஒரு கடையைப் பார்த்தேன்.. அங்கே பூ மாலை ஒன்றை வாங்கிக் கொண்டோம். சம்பவ இடத்திற்கு சென்ற போது, கூட்டம் அதிகமாக இருந்தது.. சைரன் உதவியுடன் சிலை அருகில் செல்ல முடிந்தது.. சிலை சுமார் 12 அடி உயரம் இருந்தது. நான் என்னுடைய ஷூவைக் கழட்டிவிட்டு, எனது பிஎஸ்ஓ கோவிந்தராஜனைப் பக்கத்தில் நிறுத்தி, அவர் தோள் மீது ஏறினேன்.. சிலை மீதிருந்த செருப்பு மாலையைத் தூக்கி எறிந்துவிட்டு, தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, பூ மாலையைப் போட்டவுடன் அங்கிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. அது அம்பேத்கர் சிலை. ஆனால் இதனை எதிர்த்து குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என இதே சம்பவத்தைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர். ஆனால் சம்பவ இடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அதனை முடித்தோம்’ எனக் கூறியுள்ளார்.