சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு அனைத்து உயிரினங்களின் பங்களிப்பும் அளப்பரியது. இதில் பறவை இனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.




பறவை இனங்களை பொறுத்தவரை 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. ஆனால் இன்றளவும் பூமியில் உள்ள பல சுற்றுச்சூழல் மண்டலங்களில் முதன்மை உயிரி இனங்களாக உள்ளது. பறவைகளால் மனித குலத்திற்கு அளவிட முடியாத பல நன்மைகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே வருகிறது.


குறிப்பாக தீங்கு விளைவிக்கும் பல பூச்சிகளை விவசாய நிலங்களில் இருந்து அழிப்பதன் மூலம் வேளாண் உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இதனை பொருளாதார அடிப்படையில் பார்த்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க பறவைகளே காரணமாக இருக்கிறது. 


இது ஒரு புறம் இருக்க, பறவைகள் குறித்த ஆய்வுகளும் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியன் பேர்ட்ஸ் கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் 1350-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பறவை இனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்தியாவைப் பொறுத்தவரை, இங்குள்ள 942 பறவை இனங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 22 பறவை இனங்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது என தெரிய வந்துள்ளது. அதாவது நான்கில் ஒரு பங்கு பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 


இதே போல் கடந்த ஏழு ஆண்டுகளில் பறவைகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 359 பறவையினங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 40%,  அதாவது 142 பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இமாலயக்காடை, பிங்க் ஹெட் வாத்து, ஆற்று ஆட்காட்டி, ஆற்று ஆலா, வரகுக்கோழ, ஜெர்டான்கோர்சர் போன்ற 15 வகை பறவை இனங்கள், அழிவின் விளிம்பில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டல காடுகளில் உள்ள 90 சதவீத தாவரங்களின் விதைப் பரவலுக்கு பறவைகளை முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த காடுகளை பொருத்தவரை அங்கு வாழும் மூன்றில் ஒரு பங்கு பறவைகள், விதை பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று இயற்கை வரலாற்று மையத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இந்திய காடுகளில் காணப்படும் பறவை இனங்கள், பூச்சிகளை அதிக அளவில் அளிக்கும் திறன் கொண்டது.


உதாரணமாக உன்னி கொக்கு தனது உணவாக பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையே 80 சதவீதம் உட்கொள்கிறது.  ஒரு உண்ணிகொக்கால் மட்டுமே, ஒரு விவசாய பருவத்தில் 1.59 லட்சம் ஹெக்டர் அளவிலான விலை நிலங்கள் பாதுகாக்கப்படுகிறது. பறவை இனங்கள் இருப்பதால் மட்டுமே, இன்னும் பல அரியவகை காட்டு தாவரங்கள் அறியாமல் காக்கப்பட்டு வருகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 


பறவைகளால் நிகழும் விதை பரவல் தாவரங்களுக்கு பல்வேறு நன்மைகளையும் பெற்று தருகிறது. உதாரணமாக ஒரு தாவரம் புதிய இடத்தில் வளரும்போது, பழைய இடங்களில் ஏற்படக்கூடிய காளான், பூஞ்சைகள் இல்லாமல் இருப்பதற்கு பறவைகளை காரணம். இந்த வகையில் பூஞ்சை, காளான் தொற்றுகளில் இருந்து மரங்களும், செடிகளும் பறவைகளால் காக்கப்படுகிறது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பறவை இனங்களில் 75 சதவீதம் குறைந்துள்ளது. இந்திய நீர் நிலைகளுக்கு வலசை வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பறவையினங்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.


பறவைகள் அழிவது அல்லது குறைவது என்பது சுற்றுச்சூழல் மண்டலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பறவைகளின் எண்ணிக்கை குறைய காரணமாக இருக்கும் அனைத்து காரணிகளையும் நாம் கண்டறிய வேண்டும். அதை முற்றிலும் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வருங்காலத்தில் அதற்கான மிகப்பெரிய விலையை நாம் அதற்காக  கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என சுற்றுச்சூழல் மற்றும்பறவை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அபாயம்.... உணரனும்...


கடந்த 50 ஆண்டுகளாக விலை நிலங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பறவை இனங்கள் அதிக அளவில் அழிவை சந்தித்து வருகின்றன. உதாரணமாக விலை நிலங்களில் பயன்படுத்தப்படும் மோனோகுரோடோபஸ் என்னும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தே, மயில்களின் இறப்பிற்கு காரணம் என்று சமீபத்திய ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதே போல் ஒவ்வொரு பறவையின் இறப்புக்கும் ஒரு பூச்சிக்கொல்லி காரணமாகிறது. பறவைகளால் பயிர்கள் சேதாரம் ஆகிறது என்ற எண்ணத்தில், பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர்.


இதுவே பறவைகளின் அழிவிற்கு காரணமாகிறது. அதே நேரத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளால் மண்ணின் வளம் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பெரும்பாலானவர்கள் உணரவில்லை. இதை அவர்கள் உணராமல் இருப்பது அபாயமானது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.