கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நடந்த கிராம ஊர் கூட்டத்தில் மது அருந்துபவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் குடித்துவிட்டு யாரும் இந்த கிராமத்துக்குள் வரக்கூடாது, 
கட்டாயமாக குடித்தே ஆக வேண்டும் என்றால் வெளியூர்களுக்கு செல்லும்போது இந்த சமாச்சாரத்தை அங்கு வைத்துக் கொள்ளலாம். இந்த கிராமத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு  பலகையும் வைக்கப்பட்டதால், அந்தக்கிராமத்துப் பெண்கள் நிம்மதியாக உள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே மீசல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு மது அருந்துபவர்கள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் அவ்வப்போது சில சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டன. பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் இருந்தனர்.




இதை கருத்தில் கொண்டு கிராம மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதில், கிராமத்தில் மது அருந்துவதற்கும், போதை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மீறி செயல்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


''கிராம கூட்டத்தில் போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது; மீசல் கிராமத்தின் வழியாக செல்பவர்கள் மது அருந்தினால் கூட நடவடிக்கை எடுக்கப்படும். இதை கடைபிடிக்க தவறினால் போலீசில் புகார் அளிக்கப்படும்,'' என அப்பகுதி கிராமவாசிகள் கூறுகின்றனர்.


இது தொடர்பாக, மீசல் பஸ் ஸ்டாப் அருகே அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. மது மற்றும் போதை பொருட்களுக்கு தடை விதித்து, அதை மீசல் கிராமத்தினர் பின்பற்றி வருவது மற்ற கிராமத்தினருக்கு முன்னுதாரணமாக உள்ளது. மீசல் கிராமத்தினரை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.