80 வயது முதிர்ந்த மூதாட்டி கணபதியம்மாளின் வீட்டை சொந்த மகளே மோசடியாக அடுத்தவரிடம் விற்றுச் சென்ற பின் வாழ்வாதாரத்திற்கு வழி இன்றி அரவணைக்க ஆதரவின்றி தவித்து வருகிறார். சட்டப்படி தமக்கு சாதகமாக இருந்த போதிலும், அதிகாரிகள் செய்யும் அலைகழிப்பால் விரக்தியின் விளிம்புக்கே சென்றுள்ள சம்பவம் சாயல்குடியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரண்மனை தெருவில் வசித்து வருபவர் 80 வயதான கணபதி அம்மாள். இவருடைய கணவர் விஜய ராமலிங்கம் வயது முதிர்வால் காலமான நிலையில், கணவரின் பல ஆண்டுகால உழைப்பின் பலனாக மனைவியின் பெயரில் வீடு ஒன்றை கட்டி அதில் அவரை குடி வைத்துள்ளார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்த போதிலும் அவரவருக்கு தனித்தனியே திருமணம் ஆகி தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்த மூத்த மகள் அங்காள ஈஸ்வரி மூதாட்டி கணபதி அம்மாளுடன் ஆதரவாக அவரை பராமரித்து சிறிது காலம் தங்கி இருந்துள்ளார்.
தன் மகள் தன் மீது காட்டிய பரிவு, ஆதரவு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தனது மூத்த மகளின் பெயரில் கணவர் தனக்காக வைத்துச் சென்ற அந்த ஒரு வீட்டை கடந்த 2012 ஆம் ஆண்டு இனாம் செட்டில்மெண்ட் போட்டு கொடுத்துள்ளார். ஆனால், இந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் தன் தாயாருடன் வசித்து வந்த சம்பவம் அறியாத கணபதி அம்மாளுக்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி இறங்கியது.
திடீரென ஒரு நாள் காலையில் கண்விழித்து பார்த்த போது தன்னுடன் உறங்கிய மூத்த மகளை காணவில்லை. அக்கம் பக்கம் இவரை தேடிப் பார்த்தும் தகவல் தெரியாததால் மனம் இடிந்து போய் சோர்ந்து அமர்ந்து விட்டார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் வந்து உங்களுடைய மகள் அங்காள ஈஸ்வரி இந்த வீட்டை என்னிடம் விற்று விட்டார். பட்டாவும் என் பெயருக்கு மாறுதலாகிவிட்டது. எனவே நீங்கள் இந்த வீட்டை காலி செய்து விடுங்கள் என கண்டிப்பாக பேசி உள்ளார்.
தன் சொந்த மகளாலேயே தான் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை தாமதமாக அறிந்து கொண்ட மூதாட்டி அழுது கதறி துடித்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் 2007 அத்தியாயம் 5 பிரிவு 23(i) ன் படி தாம் தன் மகளுக்கு எழுதிக் கொடுத்த இனாம் செட்டில்மெண்டை ரத்து செய்ய பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறைப்படி மனு செய்துள்ளார்.
நடக்கவே முடியாத 80 வயது மூதாட்டி ஒருவர் சொந்த மகளாலேயே ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்போதைய பரமக்குடி கோட்டாட்சியர் மனு மீதான உடனடி விசாரணை செய்து, உடனடி தீர்வாக மூதாட்டி தனது மகள் அங்காள ஈஸ்வரிக்கு கொடுத்த இனாம் செட்டில்மெண்டை ரத்து செய்து உத்தரவிட்டவுடன், இவரது பெயருக்கே வீட்டு பட்டாவும் மாறுதலாக நடவடிக்கை எடுத்து உள்ளார் அது முதல் மூதாட்டியின் வீடு அவருக்கே சொந்தமாக இருந்து வருகிறது.
ஆனால், அதன் பிறகு வந்த பரமக்குடி கோட்டாட்சியராக பொறுப்பேற்ற 'அப்தாப்ரசூல்' என்பவர் முன்பு இருந்த கோட்டாட்சியர் இனாம் செட்டில்மென்டை ரத்து செய்ததை இவர் மறு ரத்து செய்து மூதாட்டிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இது தொடர்பாக பலமுறை அவரை நேரில் சந்தித்து தன் நிலை குறித்து எடுத்துக் கூறியும் செவி சாய்க்காத அதிகாரி எதிர்மனுதாரிடம் பலன் பெற்றதாக சொல்லப்படும் நிலையில், தள்ளாத வயதில் நடக்க இயலாமல் இருக்கும் தருவாயில் உள்ள 80 வயது
மூதாட்டியை அலைக்கழிப்பு செய்து வருவது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தனது இறப்புக்கு பிறகு, இறுதிக்காலத்தில் தன்னுடைய மனைவி யார் கையையும் எதிர்பாராமல் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது கணவரால் அவருக்காக விட்டுச் செல்லப்பட்டு அந்த ஒற்றை விட்டு இழந்து அனாதையாக நடுநோட்டில் நிற்கிறார்.
முன்பிருந்த பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முறையாக விசாரணை செய்து, தமிழ்நாடு மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் 2007 அத்தியாயம் 5 பிரிவு 23(i) ன் படி மூதாட்டி கணபதியம்மாள் அவரது மகளுக்கு எழுதிக்கொடுத்த இனாம் செட்டில்மென்ட ஆவணத்தை (ஆவ்ண எண் 480/2012) ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மற்றொரு அதிகாரி ரத்து செய்ததை மறு ரத்து செய்து குளறுபடி செய்துள்ள சம்பவம், மூதாட்டியை விரக்தியின் விளிம்பு நிலைக்கே கொண்டு சென்றுள்ளது. எனவே, அரசு அதிகாரிகள் தீர விசாரித்து இது போன்ற ஆதரவற்ற முதியோர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.