கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலின்போது அளித்த பல்வேறு வாக்குறுதிகளை தற்போது வரை ஒன்றன்பின் ஒன்றாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. 


தொடர்ந்து, பொதுமக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும், முதலமைச்சர் கவனித்திற்கு எடுத்து செல்ல, முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல வழிகள் உள்ளன. இப்படி இருக்கும்போது மதுவை ஒழிக்க வேண்டும் என்று மது அருந்திவிட்டு முதலமைச்சரை தேடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


என்ன நடந்தது..? 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீடானது சென்னையில் ஆழ்வார்வேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் உள்ளது நாம் அறிந்ததே. இந்த சாலை முழுவதும் காவல்துறையினரால் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்த சாலைக்குள் நீங்கள் செல்ல வேண்டும் என்றால், உரிய அனுமதியின்றி செல்லவே முடியாது. இப்படியான சூழ்நிலையில், ’போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டிய இரண்டு சக்கர வாகனம் ஒன்றில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் சித்தரஞ்சன் சாலைக்குள் சென்றுள்ளார். 


இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என எழுதி இருந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் யாரும் அவரை தடுத்து நிறுத்தி கேள்வி எதுவும் கேட்கவில்லை. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட வாலிபர் இரு சக்கர வாகனத்தில் நேராக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன் நின்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். 


இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய நபர் குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக போதையில் இருந்த அந்த நபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 


தொடர்ந்து, காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணையில் இவரது பெயர் சந்தோஷ் என்று தெரியவந்துள்ளது. 24 வயதான இவர், ராமநாதரபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் பகுதியை சேர்ந்தவர். வேலை தேடி சென்னை வந்த சந்தோஷ், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்துள்ளார். 


வேலை நேரமாக குடிப்பது ஒன்றை சந்தோஷமாக சந்தோஷ் செய்து வந்துள்ளார். இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நேராக இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் வீடு நோக்கி கிளம்பிய அவர், மதுபோதைக்கு தான் அடிமையாகி விட்டதாகவும், என்னை போன்று இனி யாரும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்ற நோக்கில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வந்ததாக தெரிவித்துள்ளார். 


’போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம்..? 


மேலும், சந்தோஷிடம் எப்படி ’போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் கேன் போட சென்று, வந்தபோது அங்கு வசிக்கும் அருண் என்ற காவலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் ஹோட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி விட்டு வருகிறேன் என்று கூறி மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு நேராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்ததாக சந்தோஷ் தெரிவித்தார். இதனால் அங்கு சில மணி நேரங்கள் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.