தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது நிஜமாகவே கோடை காலம் தானா என கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் வானிலை அடியோடு மாறிவிட்டது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4 ஆம் தேதி தொடங்கியது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் தமிழ்நாட்டில் தினமும் 100 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்தது. 


ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


குறிப்பாக தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும்,  இன்னும் 5 நாட்களுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த 5 நாட்களில் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை வேகமாக காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி தான் மழை பெய்ய காரணம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்றைய நிலவரம் என்ன? 


தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் விருதுநகர், திருப்பூர், கோவை,திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வைகாசி மாத பௌர்ணமிக்காக இன்று முதல் 5 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.