பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி ஈடுபடக்கூடாது என்பதற்காகவே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், மோடி அரசின் எண்ணம் ஈடேறாது என்று கோவை ராமகிருஷ்ணன் கரூரில் பேட்டி.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்திருந்தார்,
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாடாளுமன்றத்தில் அதானி குழும ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அதானி ஊழல் குறித்து தொடர்ந்து பேசி வருவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. பதவி பறிப்பின் மூலமாக ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நோக்கத்தில் பாஜகவின் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜகவின் எண்ணம் ஈடேறாது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக ஆன்லைன் தடை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது என்று சமீபத்தில் தெரிவித்துள்ளதால், இந்த முறை மசோதா சட்ட வடிவமாக மாறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
ஆணவக்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆணவக் கொலைகள் நடந்து வந்த நிலையில், தற்போது கிருஷ்ணகிரியில் பொருளாதார ஆணவக்கொலை நடைபெற்றுள்ளது. தமிழக அரசு ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு வழங்குவதற்காகவே தகுதியான நபர்கள் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு கூறுகிறது. பொதுவாக ஒரு திட்டத்தை அறிவிக்கும் போது மத்திய, மாநில அரசுகள் எதுவாக இருந்தாலும் பொதுவாகவே அறிவிப்பார்கள். திட்டம் நடைமுறைக்கு வரும்போதுதான் அதில் பயனாளிகள் யார் என்பது முழுமையாக தெரியவரும் என்றார்.