குரூப் 4 தேர்வில் தங்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவித்து, தேர்வர்கள் 40 பேர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24ஆம் தேதி தேதி வெளியான நிலையில், தேர்வு முடிவுகளில் முறைகேடு உள்ளதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டினர். குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள், தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல ஒரே தேர்வு மையத்தில் இருந்து தேர்வெழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் புகார் எழுந்தது. 


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 


தென்காசியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். 


குரூப் 4 தேர்வு சர்ச்சை பின்னணி


குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதமாகி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின் தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ அஜய்‌ யாதவ்‌ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு - 4 (குரூப் 4) இல்‌ அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ குறித்து தேர்வாணையத்தால்‌ 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக் குறிப்பில்‌ தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள்‌ தொடர்பான பணிகள்‌ தற்போது தேர்வாணையத்தில்‌ துரிதமாக நடைபெற்று வருகின்றன. 


மேலும்‌, இத்தேர்வின்‌ முடிவுகள்‌ இம்மாத இறுதிக்குள்‌ வெளியிடப்படும்‌ என்று மீண்டும்‌ தேர்வர்களின்‌ கனிவான தகவலுக்காகத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டது.


இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் தங்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவித்து, தேர்வர்கள் 40 பேர் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுகுறித்துத் தேர்வர்களில் சிலர் பேசும்போது, ’’நாங்கள் முறையாகப் படித்துத் தேர்வு எழுதினோம். எனினும் தேர்வு முடிவுகள் எங்களுக்கு வெளியாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தளத்தில், எங்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டால், ’மதிப்பீடு செய்யத் தகுதி அற்றவை’ என்று வந்துள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.


எனினும் விரைவில் இதுகுறித்த விளக்கத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.