பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் `இசையின் இசை’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வெளியீட்டு விழா காணொலி காட்சி மூலமாக இன்று நடைபெற்றது. அப்போது, இந்த விழாவில் ராமதாஸ், “தமிழ் இசைதான் உலகின் ஆதி இசை ஆகும். சங்க இலக்கியங்களில் தமிழ் இசை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் 103 பண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலில் தமிழிசை பாடல்கள் ஏராளமாக உள்ளன. தமிழ் இசையை குழந்தைப் பருவத்தில் இருந்தே படிக்க வேண்டும்.
அதற்காகத்தான் பள்ளிகளில் தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன். அதுவும் தமிழ் இசைப் பாடத்திற்கு தேர்வு வைத்து அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும்தான் அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், தமிழ்நாட்டில் அந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எங்கு தமிழ் இருக்கிறது? தமிழ் எங்கிருக்கிறது என்பதை காட்டினால் பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு ஆங்கிலக் கலப்பு உள்ளது. இடையிடையே ஏதோ இரு வார்த்தைகள் தமிழ் வரும். அதை மாற்றுவதற்காகதான் தனித்தமிழுடன் தொலைக்காட்சியை நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்கு என்னன்னவோ செய்தோம். தமிழ் இசையை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2003-ம் ஆண்டு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, 2005-ஆம் ஆண்டு பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் ஆகியவற்றை உருவாக்கி பண்ணிசை பெருவிழாக்களை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நடத்தினோம்.
தனித்தமிழ் சொற்களை மட்டுமே வசனமாக பேசும் வகையில் இலக்கணம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டோம். மார்கழி இசை விழாக்களில் தமிழிசை முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. இசை விழாக்களில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் பங்கேற்றால் கூட, பிறமொழி பாடல்களைத்தான் பாடுகிறார்கள். கேட்டால் தமிழில் பாடுவதற்கு பாடல்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அவ்வாறு தமிழில் பாடாமல் பிற மொழியில் பாடுவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். என்னுடைய ஆசை எல்லாம் தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழ் இருக்க வேண்டும் என்பதுதான். காலம் இப்படியே சென்றுவிடாது. நிச்சயமாக ஒருநாள் காலம் மாறும். நாம் அதை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால் ஏற்படும்” என்று பேசினார்.