சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் உலகளவில் பெருமை சேர்த்துள்ளது. கடந்த ஆட்சியில் கீழடியில் அகழாய்வு பணிகளை உலகிற்கு காட்டும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடியில் இன்று தொழில்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கிடைத்த பழங்கால பொருட்களையும் நேரில் கண்டறிந்தார்.


இதையடுத்து, மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் திருமலை நாயக்கர் மஹாலில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “தென்தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னமாகவும், மதுரை நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்ந்து வருகிறது. இந்த அரண்மனை வளாகத்தை தமிழக அரசு புதுப்பித்து பொலிவு பெறச்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.


தமிழகத்தில் உள்ள இத்தகைய மரபு, பண்பாட்டுச் சின்னங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து தமிழர் நாகரீகம், பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையிலும் சரியான முறையில் பராமரிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, தமிழக அரசின் தொல்லியில் துறையால் இந்த அரண்மனை வளாகம் ரூபாய் 8 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.




பல்வேறு காலகட்டங்களில் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது ரூபாய் 11 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அரண்மனையில் உள்ள நாடக சாலை, பள்ளியறை போன்ற பகுதிகள் புதுப்பிக்கப்பட உள்ளன.  இந்த அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு கால கல்வெட்டுக்கள் பராமரிக்கப்படுகின்றன. தொன்மையான வட்டெழுத்து, கல்வெட்டுகள் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி அவற்றின் சிறப்புகளை எளிதில் உணரும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் 3 கட்டங்களாக நடைபெறும். இதில் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும், அரண்மனைக்கு வெளியே கற்சிற்பங்களுடன் கூடிய பூங்கா, பழமையை வெளிப்படுத்தும் நூலகம் ஆகியனவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.




தொன்மையான நகரின் வரலாற்றுச் சுவடாக இருக்கக்கூடிய திருமலை நாயக்கர் அரண்மனையானது புதுப்பிக்கும் பணிகளைின் வாயிலாக மேலும் பொலிவுபெறும்.  தமிழை எந்த காலத்திலும் யாராலும் புறக்கணிக்க முடியாது. தமிழின் தொன்மையான எழுத்து வடிவிலேயே 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கீழடி ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.  இத்தகைய பெருமைகளின் காரணமாகவே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமிழைப் புறக்கணிக்கும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால் நமது மொழிக்கான முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிமுறைகளும் தமிழக அரசு மேற்கொள்ளும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் பின் தங்கியிருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு முந்தைய தி.மு.க. ஆட்சியில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டபோது தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், மதுரை – தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.


இதன் செயலாக்கத்துக்கான ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்வடிவமும் பெறாமல் இருக்கிறது. இதனால், மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.