ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான மேல் முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.   


முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன் மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகளின் நடைமுறைகள் குறித்து பன்னோக்கு விசாரணை ஒழுங்குமுறை ஆணையம் விசாரித்து வருவதாகவும் அதன் அறிக்கை கிடைத்ததும், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 


தமிழக அரசுக்கு ஆளுநரின் செயலகத்திற்கு எழுதிய கடித  நகலைக் கோரி பேரறிவாளனின் தாயார் சென்னை உயர்நீதியான்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.      


இதுகுறித்து அற்புத அம்மாள் தனது சுட்டுரையில், "அறிவின் விடுதலை கோரும் 161மனு மீது முடிவெடுக்க MDMA  இறுதி அறிக்கைக்கு காத்திருக்கிறார் ஆளுநர்னு நீதிமன்றத்தில் சொன்னது தமிழக அரசு.  ஆளுநரின் அக்கடித நகல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு இன்று மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருது.  இன்று தமிழகஅரசு என்னசெய்ய போகிறது? " என்று கேள்வு எழுப்பினர்.  


முன்னதாக, கடந்த பிப்ரவரி 5ம் தேதி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய குடியரசு தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று தமிழக ஆளுநர்  சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன்மூலம், 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்கிற தமிழக அமைச்சரவை  தீர்மானத்தை தமிழக ஆளுநர் நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


கடந்த 2018-ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் இயற்றியது. தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பிய மனுவின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும், இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநரின் செயலகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தமிழக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.