தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக அரசின் முதன்மைச்செயலர் நிலை அதிகாரியான ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். 

 

மின்வாரியமானது சில ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. மின்சார உற்பத்திக்கான டான்ஜெட்கோ எனும் தனி நிறுவனமாகவும், உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரத்தை எடுத்துச்செல்லும் டான்ட்ரான்ஸ்கோ எனும் நிறுவனமாகவும், தாய் அமைப்பாக மின்வாரியம் எனவும் அமைக்கப்பட்டது. இந்த மூன்றுக்கும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்துவரும் பங்கஜ்குமார் பன்சாலுக்குப் பதிலாக, லக்கானியை நியமித்து தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 



 

மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லக்கானி, ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வுத் துறையின் ஆணையராகப் பதவிவகித்து வந்தார். பெரும்பாலும் இந்தப் பதவியானது ஐஏஎஸ் அதிகாரிகளிடையே விரும்பத்தகாத பதவியாகவே கருதப்படுகிறது. அவர்கள் அப்படி நினைப்பதற்கான முகாந்திரமும் இருக்கத்தான் செய்கிறது. திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ’மதிப்பில்லாத’ பதவிக்கு தூக்கியடிக்கப்பட வேண்டியவர்களில், மூத்த அதிகாரிகள் இந்தப் பதவியைப் போன்ற குறிப்பிட்ட சில பதவிகளுக்கு நியமிக்கப்படுவது உண்டு. 

 

கடந்த முறை கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டரங்கில் பொதுவெளி நிகழ்வாக நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியின்படி அங்கேயே அவர் இலவச அரிசி வழங்குவதற்கான ஆணையில் முதல் கையெழுத்தை இட்டார். அப்போது அவருக்கு பேனாவையும் கோப்பையும் எடுத்துக்கொடுத்தவர், நாராயணன். அதையடுத்து மிகக் குறுகிய காலத்தில் அவர், அந்தப் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பக அலுவலகத்தில், திரைப்பட பேய்வீடுகளில் இருப்பதைப் போல, தனி ஒருவராக உட்கார்ந்திருப்பார்.  அருங்காட்சியக ஆணையர்/இயக்குநர், தொல்லியல் துறை ஆணையர்/ இயக்குநர் ஆகிய பதவிகளையும் இப்படித்தான் ஆட்சியாளர்கள் கையாண்டுவந்தனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பிரபல அதிகாரி உதயச்சந்திரன் கல்வித்துறையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் தலைமை அதிகாரியாக மாற்றப்பட்டார். ஆனாலும் மற்றவர்களைப் போல அல்லாமல், அவருக்கு பிடித்த துறையுமாக அது அமைந்துவிட, அந்தப் பணியிலிருந்த காலத்தில், தமிழ்நாட்டின் தொல்லியல் துறையை மீண்டும் நிமிரச்செய்தார். 

 

ஓரம்கட்டப்பட்டு இருளில் கிடத்தப்பட்டிருந்த கீழடி ஆய்வுப் பணியைக் கிளறிவிட்டு, தமிழ்நாட்டின் தொன்மைப் பெருமையை ஆவணப்படுத்தினார். மத்திய தொல்லியல் துறைக்குச் சவால்விடும்படி மாநிலத் தொல்லியல் துறையினரையும் அகழ்வாய்வில் ஈடுபடுத்தினார். அரிதாக நிகழும் இப்படியானவற்றைத் தவிர, பேய்வீடு கதையாகத்தான்  அதிகாரிகள் பந்தாடப்படுவது இருக்கும். இந்த பின்னணியில், ராஜேஷ் லக்கானி முக்கியத்துவம் வாய்ந்த மின்வாரியத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதே எரிசக்தித் துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையராக பல ஆண்டுகள் தொடர்ந்து பணியில் நீடித்தவர்.  பிறகு வந்த ஆட்சிக்காலத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியவர், என்ன காரணத்தாலோ எழும்பூர் ஆவணக்காப்பகத்துக்கு மாற்றப்பட்டார்.

 

கொரோனாவுடன் கோடை மின்சாரத்தடையும் மீண்டும் பேசப்படும்நிலையில், அதற்கான தலைமைப்பொறுப்பில் லக்கானி அமர்த்தப்பட்டுள்ளார்.