தமிழ்நாட்டில்  வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை குறித்தான தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

குளிர்ந்த வானிலை:

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலானது சுட்டெரித்து வந்தது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில், வெப்பம் 100 டிகிரியை செல்சியஸை தாண்டியது. இதனால், மதிய பொழுதில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும் செய்தனர். இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, கள்ளக்குறிச்சியில் 12 செ.மீ., ராமநாதபுரம் 8 செ.மீ., திருவாரூரில் 7 செ.மீ., குன்னூரில் 6 செ.மீ., நாகையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read: I Phone 16e Review: பட்ஜெட் விலையில் ஐ போன் 16e: விலை, ஸ்டோரேஜ் அம்சங்கள் இதோ.!

சென்னை வானிலை:

அதேபோல், சென்னையில் வானிலையானது இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

பிரதீப் ஜான் 

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் X இல் தெரிவித்ததாவது”  கொங்கு மண்டலம் மற்றும் மத்திய தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் இருந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையில்  இன்று மழை இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார்.