வெளிநாடு செல்பவர்களுக்கு நாம் இந்தியன் என்பதை குறிக்க முக்கிய அடையாளமாக, இந்தியா பாஸ்போர்ட் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் செல்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தியா முழுவதும் 422 இடங்களில் பாஸ்போர்ட் சேவா மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவற்றை படிப்படியாக உயர்த்தி 600 இடங்களாக மாற்றப்பட உள்ளன.
கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு முக்கிய மாற்றங்களை குறித்து தெரிந்து கொள்வோம். மத்திய அரசாங்கம் பிறப்பு சான்றிதழ் மத்திய அரசாங்கம் பிறப்பு சான்றிதழ், வண்ண அடையாளம், பெற்றோர் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
பெற்றோர் பெயர் விதிகளில் மாற்றம் என்ன ?
தற்போது பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் பெற்றோர் பெயர் அச்சிடப்பட்டு வருகிறது. இனி பெற்றோர் பெயர் அச்சிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைப் பெற்றோர், பிரிந்து சென்ற பெற்றோரின் குழந்தைகளின் தனி உரிமை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு உள்ளது.
முகவரி விதிகளில் மாற்றம் என்ன ?
இதுவரை பாஸ்போர்ட்களில் முகவரி கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டு வந்தது. பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முறை தற்போது கைவிடப்படுகிறது. இனி பாஸ்போர்ட்டில் முகவரி அச்சிடப்படாது.
அதற்கு மாற்று ஏற்பாடாக குடியுரிமை அதிகாரிகள் மட்டும் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளும் வகையில், முகவரியை பார்கோடு வடிவில் அச்சடிக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் தனி உரிமை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
வண்ண அடையாளம்
பாஸ்போர்ட்டின் வகைகளை எளிதில் அறியும் வகையில், இனி குடிமக்களுக்கு எப்போதும் போல நீல நிறத்தில் வழங்கப்படும். தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறத்தில் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது.
பிறப்பு சான்றிதழில் மாற்றம் ?
இனி 2023 அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், பிறந்த தேதி உறுதிப்படுத்த வேண்டும் என்றால் நகராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரிகளால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதற்கு முன் பிறந்தவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.