தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாட்டால் ஜனவரி 3, 4, 5 தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் அதிகாலையில் வறண்ட வானிலையுடன் பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில் 3 முதல் 5ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 6,7 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை:
இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், 2022க்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடும் பணி நேற்றுடன் முடிவடைந்ததாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை 477 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவிகிதம் அளவுக்கு கூடுதலாகும். சென்னையில் 437 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 2 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாகும்.
இதே போல் வடகிழக்கு பருவமழை 445 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 01 சதவிகிதம் அளவிற்கு அதிகம். சென்னையில் 924 மி.மீ பெய்துள்ளது. அதன்படி, சென்னையில் இயல்பை விட 14 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்துள்ளது.
2022 ஜனவரி 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஓர் ஆண்டின் முழு காலத்தில், தமிழ்நாட்டில் மொத்தம் 1,131 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 22 சதவிகிதம் அளவிற்கு அதிகமாகும். சென்னையில் இந்தாண்டு மொத்தம் 1,447 மி.மீ மழை பெய்துள்ளது இது இயல்பை விட 7% கூடுதலாகும்.
அதேநேரம், 2021ஆம் ஆண்டில் வழக்கத்தை விட 57 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை அளவு 925 மி.மீ எனவும், சென்னையின் ஆண்டு சராசரி 1,350 மி.மீ எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.