2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் தொடங்கியதை ஒட்டி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் குவிந்து வருகின்றனர். காலை முதலே புத்தாடை அணிந்து தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.



உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகங்கள் முழுவதும்  களைகட்ட தொடங்கி உள்ளது. காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



 

 

நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம்

 

ஆங்கில புத்தாண்டு ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவில் ஒரே கல்லால் ஆன நடராஜர் சிலைக்கு நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் வெகு விமர்சியாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்து அபிஷேகமும் ஆராதனை நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாகளுத்து மேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் கோவிலில் ஒரே கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை உள்ளது. ஒரே கல்லால் ஆன நடராஜர் சிலை கொண்ட திருக்கோயில் பிரசித்தி பெற்றது.
  



ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஒரே கல்லால் ஆன நடராஜர் சிலைக்கு  பால், தயிர், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன்பின் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நடராஜர் சிலைக்கு  சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணியும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.