சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.


சென்னையில் மழை:


சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் தற்போது வரை லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பதிவானது. தற்போது வரையில் கருமேகங்கள் கூடியிருப்பதால் சென்னை முழுவதும் இன்னும் இரவு நேரம் போன்றே காட்சியளிக்கிறது. அதேநேரம், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இரவு நேரத்தில் பெய்த இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






புறநகர் பகுதிகளில் மழை:


சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் நிலவுவதோடு, லேசான மழையும் பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை தொடர்கிறது.


3 மணி நேரத்திற்கு மழை தொடரும்:


இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி, திருக்கழுகுன்றம்,திருப்போரூர்,உத்திரமேரூர், செய்யூர்,மதுராந்தகம், சோளிங்கர்,திருத்தணி, நெமிலி,தாம்பரம்,வண்டலூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.