சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலு குறைந்து அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் நோக்கி மெதுவாக நகரக்கூடும்.


இதன்காரணமாக, 30-ந் தேதி தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிககனமழையும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.




சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் கனமழையும் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களாக மழையின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கடலூர், நெல்லை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதோபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. அதிகாலை வரை பெய்த இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிட்டது. சென்னையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், பணிக்கு செல்வோர் மற்றும் பணி முடிந்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். 


வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பண்டிகை கொண்டாடுவதில் சிரமம் ஏற்படுமோ என்ற அச்சத்திலும் மக்கள் ஆழ்ந்துள்ளனர். அதேசமயத்தில் பட்டாசுகளின் விற்பனையும் மழையால் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண