பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை சிறப்பாக நடந்துவருகிறது. குரு பூஜையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்தினர்.


ஒவ்வொரு ஆண்டும் விழாவை முன்னெடுக்கும் அதிமுக சார்பில், தற்போது அக்கட்சியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்ளவில்லை. நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், தேனி பெரிய குளத்தில் உள்ள சிலைக்கு  ஓபிஎஸ்ஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




இதற்கிடையே குருபூஜையில் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென சசிகலா கோரியிருந்தார். அந்தக் கோரிக்கை மனுவில் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. சசிகலாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் அவருக்கு அனுமதியும் வழங்கியது. எனவே அதிமுக சார்பில்தான் சசிகலா கலந்துகொண்டார் என எடுத்துகொள்ள வேண்டியிருக்கிறது.




அதன்படி அவர் நேற்று தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சசிகலா கலந்துகொண்டு மரியாதை செலுத்திய நிலையில் இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் கலந்துகொள்ளாதது அவர்களது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கலந்துபேசி முடிவெடுப்பார்கள் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், அதிமுக சார்பில் சசிகலா மட்டுமே கலந்துகொண்டதால் அக்கட்சியின் முகமாக சசி மீண்டும் மாற தொடங்கியிருக்கிறாரோ என்ற சந்தேகம் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே எழுந்திருக்கிறது.




முக்கியமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கலந்துகொண்டு அதிமுகவின் தலைமைகள் தாங்கள்தான் என்று உணர்த்துவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர்கள் கலந்துகொள்ளாதது சசிகலாவுக்கு வழிவிட்டு அவரது தலைமையை மெல்ல மெல்ல இருவரும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களோ என்ற முணுமுணுப்பும் கட்சிக்குள் கேட்கிறது.


இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தேவர் குருபூஜையை புறக்கணிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினாலும், எந்த சூழ்நிலையிலும் குருபூஜையை அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவறவிட்டதில்லை. 


குறிப்பாக 2014ஆம் ஆண்டு தேவர் சிலைக்கு ஜெயலலிதா தங்க கவசம் சாத்தியவர். சூழல் இப்படி இருக்க அதிமுகவின் தலைமை தாங்கள்தான் என கூறிக்கொள்ளும் இவர்கள் இருவரும் எதற்காக குருபூஜையில் பங்கேற்கவில்லை என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்களும், தொண்டர்களும் கேட்கின்றனர்.




எது எப்படியோ தேவர் குருபூஜையில் அதிமுக சார்பில் கலந்துகொண்ட ஒரே தலைமை சசிகலாதான். எனவே அவரது கை கட்சிக்குள் ஓங்க ஆரம்பித்திருக்கிறது. இனி அவரது தலைமையின் கீழ்தான் கட்சியானது நகரும் என சசியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


அதேசமயம், சசிகலா கை காண்பித்தவர்கள்தான் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் அவரது தலைமையை ஏற்றுக்கொள்வதில் எந்தவித கூச்சமோ, தயக்கமோ யாருக்கும் தேவையில்லை போன்ற குரல்களும் அதிமுகவுக்குள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. 


குருபூஜையில் சசிகலாவின் பிரசெண்ட்டும், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் ஆப்செண்ட்டும் தொண்டர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறது. சசிகலா வருகை மட்டும் போதும் என்பதை பதிவு செய்ய இது நடந்ததா... அல்லது சசிகலா வந்து சென்றதால் தேவையற்ற சர்ச்சை தவிர்க்க இது நடந்ததா என்கிற சந்தேகம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. 


முன்னதாக தென் மாவட்டங்களில் அதிமுக கொடி கட்டிய காரில் அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் சசிகலா ஆதரவாளர்களையும், அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினரையும் சந்தித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Sasikala Tribute to Muthuramalingam Thevar: "ஜெ" பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலா!தேவர் சிலைக்கு மரியாதை!