தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலர்கள் பணம், பரிசு பொருட்களை வசூல் செய்வதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாகவும், பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்கு காட்டாமல் கூடுதலாக மதுபான வகைகளை வாங்கி வந்து ஜானகிபுரம் டாஸ்மாக் கடைகளின் அருகில் உள்ள குடோன்களில் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகவும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வரப்பெற்றன.




இதன் அடிப்படையில் நேற்று மாலை 4 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் மற்றும் போலீசார் 2 குழுவாக பிரிந்து ஜானகிபுரத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனையை தொடங்கினர்.


2 கடைகளிலும் டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் யாரும் வெளியே செல்லாதவாறு கடைகளின் ஷட்டர் கதவை இழுத்து மூடி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வரும் தகவலையறிந்ததும் அங்கு மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள், வெகு நேரம் காத்திருந்தும் மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர்.




இதனிடையே அந்த 2 டாஸ்மாக் கடைகளுக்கும் ஒவ்வொரு நாளும் அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து அனுப்பப்படும் மதுபான வகைகள், ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், இருப்பில் இருக்கும் மதுபாட்டில்கள், தினந்தோறும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு செலுத்தப்படும் விற்பனை தொகை ஆகியவற்றின் விவரம் குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர்களிடம் கேட்டறிந்து விசாரித்ததோடு கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்தனர்.


மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 11 மணிக்கு முடிந்தது. இச்சோதனையின் முடிவில், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றதன் மூலம் கடந்த 3 நாட்களில் வசூலான கணக்கில் வராத ரூ.31 ஆயிரத்து 680 மற்றும் கடையில் வைத்திருக்காமல் சட்ட விரோதமாக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர