தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி  பொறுப்பேற்ற பிறகு தற்போது  அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர்.


தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.


தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் சேகரின் வீடு, ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்துவதற்கான ஆணை பெற்று வந்திருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் 21- இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




ஏற்கனவே திமுக தலைவர்மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  தேர்தலுக்கு முன்பாக தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய துறைகளான சுகாதாரத்துறை, மின்சாரத்துறை,  நகர்ப்புற வளர்ச்சித் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளில்  அதிகபட்சமாக ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


எம்.ஆர் விஜயபாஸ்கர்  மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்,  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஒப்பந்தங்களை பெறுவதில் ஊழல் செய்துள்ளதாகவும், மேலும் போக்குவரத்து துறையில் பணியாளர்கள் நியமனம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது


சோதனை நடைபெறுவதை தகவலறிந்த  அதிமுக நிர்வாகிகள் அதிகளவில் கூடியதால் எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது புதிய பேருந்துகள் வாங்கிய ஒப்பந்தம், தொழிலாளர்களின்  பணி நியமனம் செய்வதில் முறைகேடு மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக  புகார்கள் தெரிவிக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எம்.ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்காள். எம்.ஆர்.விஜயபாஸ்கர்  நடத்தி வரும் அறக்கட்டளை, கல்குவாரி, தொழில் நிறுவனங்களின் ஆவணங்களை வைத்து எவ்வாறு சொத்து சேர்ந்தது அதற்குரிய கணக்குகளை முறைபடி செலுத்தி உள்ளார்களா என  அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


தமிழக ஆளுநரை , முதலமைச்சர் ஸ்டாலின்  சந்தித்து தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்த அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது மேலும் அடுத்தகட்ட விசாரணை சோதனையும் விரைவில் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது..