நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


கொரோனா தொற்றுக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,  சிபிஐ முன்னாள் தலைமை புலனாய்வு அதிகாரி  ரகோத்தமன் கொரோனா தொற்றால் சென்னையில் காலமானார்.


சில தினங்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரகோத்தமன், சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.


ரகோத்தமன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  பணி ஓய்வுக்கு பிறகு சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த அவர், பல தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டு வந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர், அதிகாரிகள் ஊடகத்தினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.