திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் கொரோனாவால் எனது அண்ணனை இழந்தேன், பெற்றோரை காப்பாற்ற உதவுங்கள் என்று இளம்பெண் ஒருவர் உதவி கேட்டுள்ளார்.


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


மேலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை மருத்துவமனையில் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரிடம் உதவிக் கேட்டு சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.






இந்நிலையில், 62% நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு முகநூலில் கண்ணீர் மல்க இளம்பெண் ஒருவர் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு  வைரலாகியுள்ளது.



சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ஷீலா தம்பதி. இவர்களது மகளான ஐஸ்வர்யா , முகநூலில் லைவ் வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அதில் தான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும் தனக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது சகோதரன் கொரோனா பாதித்து இறந்ததாக கூறிய அவர், தற்போது தனது தாயும் தந்தையும் கொரோனா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.


ஆவடி அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் பெற்றோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வேண்டும். தனது பெற்றோரை காப்பாற்ற உதவ வேண்டுமென கண்ணீர் மல்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  இந்த வீடியோவை காணும் அனைவரும் தங்கள் வீட்டு மகளாய் அவரை எண்ணி உதவ முன்வர வேண்டும் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.


<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/OqTFkfnKpI4?start=120" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>


முன்னதாக, சகோதரனை இழந்த தான் மேலும் இரு உயிர் இழப்பை தாங்கக்கூடிய சக்தி கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். கொரோனா உயிரிழப்பு என்பதை கடந்து ஒரு குடும்பத்தை எவ்வாறு உருக்குலைக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ சரியான உதாரணம். ஏற்கனவே ஒருவரை இழந்த குடும்பத்தில், மேலும் இருவர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாசகம் கேட்பது போல் ஒவ்வொரு நாளும் ஆக்சிஜனுக்கு அல்லாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் படுக்கைகள் கூட இல்லையென்றால் எவ்வாறு மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறது என தெரியவில்லை. இன்னும் நிலைமை சரியாகவில்லை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால், எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க முடியவில்லை.