பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் குறித்து அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ரஃபேல் வாட்சின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்


ரபேல் வாட்ச்:


BR 03 RAFALE என்கிற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த வாட்ச்சை பெல் அண்ட் ராஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.  வெறும் 500 வாட்ச்களை மட்டுமே அந்த நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், 149ஆவதாக தயாரிக்கப்பட்ட வாட்சை தான் அணிந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


பிரான்சில் இருந்து இந்தியா வாங்கி இருக்கும்  ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த டாஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்சை பெ அண்ட் ராஸ் நிறுவனம் தயாரித்துள்ளதே இந்த வாட்ச்சின் இவ்வுளவு பெருமைகளுக்கும் காரணமாக கூறப்படுகிறது. விண்வெளி வீரர்கள், போர் விமானிகள்,  கண்ணிவெடிகளை அகற்றும் வல்லுநர்கள் மற்றும் உயரடுக்கு போலீஸ் அதிகாரிகள் பெல் & ராஸ் வகை வாட்ச்களை தங்கள் வேலையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. 


போர் விமான பாகங்கள்:


BR 03 RAFALE  - வாட்சை பொறுத்தவரை ரஃபேல் போர் விமானங்களைக் கொண்டாடும் வகையில், டிசைன் தொடங்கி அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் வரை பல்வேறு சிறப்பம்சங்களை சேர்த்து உருவாக்கிவுள்ள இந்த வாட்சை விமான பாகங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை செராமிக்கைக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள்.  இந்த வகை செராமிக்குகள் ஸ்டீலை விட எடை குறைவானதாகவும், அதேநேரம் வைரத்தை விட வலுவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.  


ரஃபேல் போர் விமானத்தின் நிறத்தை ஒத்து  டிசைன் என போர் விமானத்துக்கு நெருக்கமாக இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ரஃபேல் போர் விமானத்தின் டி.என்.ஏ உங்கள் கைகளில் இருக்கிறது என இந்த வாட்சை மார்க்கெட்டிங் செய்து வருகிறது பெல் அண்ட் ராஸ் நிறுவனம். இந்த வாட்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும்   இந்த வாட்சுக்கான் கைப்பட்டைகள் மற்றும் டூல் கிட்டுகள் ஆகியவைகளுக்கும் தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தகக்து