Radhika Complaint: திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி:


திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்குவது தொடர் கதையாகிவிட்டது. தேர்தல் பிரச்சார மேடையில் ஆபாசமாக பேசி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக மோசமான கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வந்தார்.


தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் பொது மேடையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, பாஜகவை சேர்ந்த குஷ்பூ பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.


இதையடுத்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2023 ஜூன் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.


பின்னர், தேர்தல் பரப்புரை கூட்டங்களில் மீண்டும் பேச தொடங்கினார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பேசினார்.


ராதிகா அளித்த பரபரப்பு புகார்:


அப்போது, ராதிகா, அவரது கணவர் சரத்குமார் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியவை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாகின. இதை கடுமையாக விமர்சித்த ராதிகா, "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே. அவங்களதான் குத்தம் சொல்லணும்.


இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும். இதற்கு திமுகவும் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் வெட்கப்பட வேண்டும். அவமானகரமானது" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சையாக பேசி சிறைக்கு சென்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது மீண்டும் ஒரு சிக்கிலில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.