தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில், சென்னையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “  சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். ஏப்ரல் 7-ந் தேதிக்கு பிறகு வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் பாதித்தவர்கள் இருக்கிறார்களா? என்று ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நாளை வாக்களிக்க, வாக்குச்சாவடிகளுக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாக்குச்சாவடியில் முகக்கவசம் வழங்கப்படும் என்று யாரும் நினைக்க வேண்டாம்.




தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் தரும் வகையில், மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா நோயாளிகளின் பராமரிப்பு மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணிநேரத்தில் வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகளுக்கு தற்காப்பு கவச உடையும் வழங்கப்பட உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.