4 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மகனை கட்டி அணைத்து தாய் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
வெளிநாட்டில் வேலை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி அழகி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கட்டிட வேலை செய்து வரும் சுப்பையா, கடந்த சில நாட்களுக்கு முன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
குடும்ப வறுமையால் மூத்த மகன் வீரபாண்டியன் 10ஆம் வகுப்பு வரைக்கும் தான் படிக்க முடிந்தது. இதனை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.20 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 7ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும்போது, வீரபாண்டியன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதனால் பலத்த காயமடைந்த வீரபாண்டியனை பக்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்தில் சிக்கிய மகன்
வீரபாண்டியனுக்கு விபத்து ஏற்பட்டது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறிபோன அவரது தாய், எப்படியாவது மகனை சொந்த ஊருக்கு அழைத்து வர நினைத்தார். ஆனால் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். போதுமான பணம் இல்லாததால் இதுபற்றி வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து இதுபற்றி தகவல் தெரிவித்தார்.
தன் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அதன்படி, 4 மாத போராட்டத்திற்கு பிறகு வீரபாண்டியனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கதறி அழுத தாய்:
இதனையடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு வீல் சேரில் கை, கால்கள் முடங்கிய நிலையில், எலும்பும் தோலுமாக வந்த தன் மகனை பார்த்த தாய், ஆளே அடையாளம் தெரியாமல் போன தனது மகனை பார்த்து அழுதபடியே ஓடோடி வந்தார். உருக்குலைந்த நிலையில் தனது மகனை பார்த்த தாய் அழகி வீரபாண்டியனை கட்டியணைத்து கதறி அழுதார். தனது தாய் அழுவதை கண்டு கண்கலங்கிய வீரபாண்டியன் தாயின் கண்ணீரை துடைத்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. நான்கு மாத போராட்டத்திற்கு பிறகு மகன் வீரபாண்டியன் சொந்த ஊருக்கு வரவழைத்ததற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க