பதினைந்தாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் பழவேற்காடு ஏரியின் கரையில் இருக்கிறது அந்த மீன் ஏலக்கூடம். இந்த விற்பனை மையத்தில் பெரும்பாலும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் பெண்கள். இறால் விற்பனைதான் இந்த ஏரிப் பகுதியின் முக்கிய வருவாய். வருடாந்திரமாக 1232 கிலோ இறால் இந்தப் பகுதியில் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தனிநபராக ஒரு பெண் இறால் கூறுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை  விற்பனை செய்கிறார். இதுதவிர அவற்றை சுத்தம் செய்து தருவதற்கு 10 ரூபாய். இப்படி வருமானத்தை ஈட்ட நாளொன்றுக்கு அவர்கள் 8 முதல் 12 மணிநேரம் வரை உழைக்க வேண்டும். இது போல வாளை, தேன்பாறை என பல வகை மீன்களை ஏரியில் இருந்து பிடித்து வந்து விற்பனை செய்வது, அதன் கருவாட்டு விற்பனை ஒருபக்கம் தனியே என அந்த மீனவப் பகுதியின் குடும்பப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் பெண்களின் பிசினஸ் சென்டர் அந்த மீன் ஏலக் கூடம்.




புகைப்படம் நன்றி: பழனிக்குமார்


2018ல் எண்ணூர் அதானி காட்டுப்பள்ளி துறைமுகமும் சிறப்புப் பொருளாதார மண்டலமும் இணைந்து அறிவித்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் இந்த பழவேற்காடு பகுதியின் வனவிலங்கு சரணாலயத்துக்கு 2.1 கி.மீ. தொலைவில்தான் அமைக்கப்பட உள்ளதாக இருந்தது. விதிகளின்படி சரணாலயத்துக்கு 10 கிமீ தொலைவு வரை எவ்வித விரிவாக்கத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது. இந்த அறிவிப்பால் பழவேற்காடு பகுதியின் பறவைகள் மற்றும் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அப்படி பாதிக்கப்படும் நிலையில் தினமும் கடலிலும் ஏரியிலும் மீன்பிடிக்கச் செல்லும் ஆண்களைவிட அவற்றை எடுத்துவந்து இதுபோன்று சிறுதொழில் செய்து, அந்த வருவாயில் சிறுசேமிப்பு எனச் சிறுகச் சிறுகச் சேர்த்து நுண்நிதியின் மூலம் இந்தப் பகுதியின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும்  பெண்களின் பிழைப்புதான் மிகவும் பாதிக்கப்படும்.




புகைப்படம் நன்றி: பழனிக்குமார்


ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி உலக அளவில் 70 சதவிகிதப் பெண்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பண்பாட்டு, சமூக மற்றும் பொருளாதார அளவில் பல்வேறுபட்ட சிக்கல்களைப் பெண்கள் சந்திக்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகளும் பறிக்கப்படுகிறது,ஆண் ஒருவர்க்கு ஒரு வேலை பறிபோகும் சூழலில் அவர் வேறு வேலை தேடிக் கொள்வது போல பெண்களுக்கு அப்படியான வாய்ப்புகள் அமைவதில்லை. அதானி துறைமுக விரிவாக்கம் நிகழும் நிலையில் பழவேற்காடு பெண்களுக்கும் இந்த நிலை பொருந்தும். அதனாலேயே கடந்த மூன்று வருடங்களாக இந்த விரிவாக்கத்தை எதிர்த்து வருகிறார்கள் பழவேற்காடு பெண்கள்.





புகைப்படம் நன்றி: பழனிக்குமார்


அந்தப் பகுதியில் வசித்துவரும் தேசம் (56) நம்மிடம் பேசினார், ‘எனக்கு நான் வயசுக்கு வரதுக்கு முன்னவே கல்யாணம் செஞ்சு வைச்சிட்டாங்க. 43 வருஷமாச்சு எனக்கு கல்யாணமாகி. குடும்பத்துல எதாச்சும் பிரச்னைனா குடும்பத்து ஆளுங்களவிட நாங்க பொம்பளைங்களுக்குள்ளதான் பணத்தை சேர்த்து வைச்சு கொடுக்கல் வாங்கல்னு சமாளிச்சுப்போம்.ஒருத்தியோட குடும்பக் கஷ்டம் வீட்டு ஆளுங்களவிட  இன்னொருத்திக்கு நல்லாப் புரியும்’ என்கிறார். இப்படி ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது முதல் ஊருக்குள் பெயருக்கு இயங்கிவந்த 1 மணிநேர மருத்துவமனையை 24 மணிநேர மருத்துவமனை ஆக்கியது வரை இந்தப் பகுதியின் சமூகப் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தியதில் இந்தப் பெண்களின் பங்கு அதிகம். அந்த வரிசையில் அதானி துறைமுக விரிவாக்க எதிர்ப்பும்....




புகைப்படம் நன்றி: பழனிக்குமார்


கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் என்னும் கணக்காக உணவு விருந்தோம்பல்தான் அவர்கள் எதிர்ப்புக்கான ஆயுதம். சுற்றுப்பட்டு நான்கு கிராமங்களில் இருந்து மொத்தம் 18 பெண்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியிருக்கும் மீனவப் பெண்கள் குழுதான் இந்தப் போராட்டத்தை முன்னடத்தி வருகிறது. அந்தப் பகுதி நீரோட்டத்திலிருந்து பிடிக்கப்படும் இறால், நண்டு, மீன்களைக் கொண்டு சமைக்கப்படும் உணவுகளைக் கொண்டு அதானி துறைமுகத்துக்கு எதிரான தங்களின் போராட்டத்தை அரசிடமும் மக்களிடமும் பதிவு செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.குறிப்பாக இந்தப் பகுதியில் மட்டுமே செய்யப்படும் பாரம்பரியமான ’இறால் கருக்கல்’ இந்த உணவு போராட்டத்தின் முக்கிய அம்சம். 




புகைப்படம் நன்றி: பழனிக்குமார்


உணவுப் போராட்டத்தால் என்ன செய்துவிட முடியும்? 


உணவு வழியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வரலாற்றின் போக்கையே மாற்றியிருக்கின்றன. 1863ல் சிவில் போர் சமயத்தில் அமெரிக்க பெண்கள் ஒன்றிணைந்து நடத்திய ரொட்டிக் கலவரம் ராணுவத்துக்கே சவால்விடுவதாக இருந்தது.ராணுவத்துக்கே சவால்விட்ட  பெண்களால் ஒரு தனியார் நிர்வாகத்தைச்  சமாளிக்க முடியாதா என்ன? . 


இந்த வருடாந்திரப் போராட்டத்தின் மூன்றாம் ஆண்டு இது. சற்று வித்தியாசமாக இந்தமுறை அதானி துறைமுக விரிவாக்கத்தைத் தடுப்போம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  முதலமைச்சரின் சார்பாக அந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
’முதலமைச்சருக்கு நன்றி சொல்லுறது வழியா துறைமுக விரிவாக்கத் திட்ட அதானி கைவிடுவதற்கு தொடர்ந்து வலியுறுத்திட்டே இருப்போம்’ என்கிறார் மீனவப் பெண்கள் குழுவில் ஒருவரான மாலதி. 


செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்     
                                - குறள் 412


செவிக்கு எட்டாத கோரிக்கை வயிற்றுக்கு ஈயப்படும் உணவின் மூலமாக எட்டட்டும்.