உங்களுடைய பிறந்தநாள் ட்ரீட்டாக நண்பர்களுக்கு என்னவெல்லாம் கொடுப்பீர்கள்? 


இனிப்பு, கேக், சாக்லேட்டுகள், தின்பண்டங்கள், உணவு...?


புதுக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவன் தமிழழகன், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு உடன் படிக்கும் 250 மாணவர்களுக்கும் தலா 1 பலா மரக்கன்றைப் பரிசாக அளித்து அசத்தி உள்ளார். 


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சேந்தன்குடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த மரம் தங்கசாமியின் பேரன்தான் மாணவன் தமிழழகன். மரம் தங்கசாமி தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் மரங்களுக்காகவே அர்ப்பணித்தவர். சாமிக்கு மாலை போடுபவர்களைப் போல, ஆண்டுதோறும் மரங்களுக்கு மாலை போட்டு, தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் சென்று மரங்கள் பற்றிய விழிப்புணர்வை மேற்கொண்டவர். 


இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து பயணித்து, மரங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்தியவர். இவரின் பணியைப் பாராட்டி 2008ஆம் ஆண்டு தமிழக அரசு தங்கசாமிக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்பித்தது. மரம் தங்கசாமி கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.


 



மரம் தங்கசாமி


மரம் தங்கசாமியின் பேரன் தமிழழகன், சேந்தன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கிறார். தமிழழகன் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து வருகிறார். 


இதுகுறித்துப் பேசிய தமிழழகன், "தாத்தாவின் நினைவாக சக நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகளை நேற்று (பிப்.1) பரிசளித்தேன். 1ஆம் வகுப்பில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஒரு மரக்கன்றைப் பள்ளியில் நடுவதோடு, அங்குள்ள அனைவருக்கும் மரக்கன்றுகளை நினைவாகக் கொடுக்கிறேன். அதேபோல நாட்டுக் காய்கறி விதைகளைத் தேடித்தேடிச் சேகரித்து வருகிறேன். 


பிராய்லர் கறியின் கேடுகளை உணர்ந்து, அதைச் சாப்பிடாமல் தவிர்த்து வருகிறேன். தாத்தா, அப்பாவின் வழியில் இயற்கைக்கு உறுதுணையாக மரங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்" என்று மாணவன் தமிழழகன் தெரிவித்தார். 




மரம் தங்கசாமியின் மகன் கண்ணன், தன்னுடைய தந்தை விட்டுச்சென்ற 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் ஊர் மக்களுடன் இணைந்து புதுக்கோட்டையில் கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பைத் தொடங்கி, கிராம குளக்கரைகளின் நடுவில் மரக்கன்றுகளை நட்டு, குறுங்காடுகளை உருவாக்கி வருகிறார். இந்த அமைப்பினர் நீர்நிலைகளின் கரைகளையும் தூர்வாரி பலப்படுத்துகின்றனர். இந்த சூழலில் மத்திய வனத்துறை அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 0.25 சதவீதம் வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளதாகக் கூறுகிறார் கண்ணன். 


பகல் வேளையாக இருந்தாலும் அவர் பேசும்போது ஊடாகக் கேட்கும் குயிலின் ஓசை காதுகளைத் தாலாட்டுகிறது.  'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, ''மாணவர்களிடம் பழம் தரும் கன்றுகளைக் கொடுத்தால், அதை அவர்கள் ஆர்வத்துடன் வளர்ப்பர் என்பதால் பழ மரக்கன்றுகளைக் கொடுக்கிறோம். மாதுளை, நெல்லி, சீதாப்பழக் கன்றுகள் வரிசையில் இந்த ஆண்டு பலா மரக்கன்றைத் தந்திருக்கிறோம். பெரும்பாலானோரின் வீட்டில் கன்றுகள் மரங்களாகி காய்க்கத் தொடங்கிவிட்டன.


அதேபோல அப்பா, நம்மாழ்வாரின் பிறந்த நாள், நினைவு நாள்களிலும், ஊர் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மரக் கன்றுகளைக் கொடுத்து வருகிறோம். நம்மைப் பார்த்து இன்னும் 10 பேராவது தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதைத் தொடர்ந்து செய்கிறேன். அந்தக் காலத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் அப்பா மரக்கன்றுகளைக் கொடுப்பார். அப்போது அது கடுமையாக கேலி, கிண்டலுக்கு ஆளானாலும், இப்போது பெரிய அளவில் பலரும் அதைப் பின்பற்றி வருகின்றனர்.


 



கண்ணன்


அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்தாலே அச்சமாக உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் பனிப்பாறைகள் உருகுகின்றன. எரிமலைகள் வெடிக்கின்றன. அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உலகம் முழுவதும் வனப்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. இந்தப் பரப்பளவு, 33 சதவீதமாக இருப்பதற்குப் பதிலாக 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் வெப்பநிலை உயர்வு, காலநிலை மாற்றம், பருவமழை மாறுபாடு ஆகிய பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. 


இந்த சூழலில் மனிதர்கள் ஒவ்வொருவருமே மரங்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். மரக்கன்றுகளை முடிந்த அளவுக்கு நட்டுப் பராமரிக்க வேண்டும். அதற்கான சிறிய முன்னெடுப்பாகவே என்னுடைய மகனின் பிறந்தநாளுக்கு மரக்கன்றுகளை நினைவாகக் கொடுத்தோம்'' என்று முடித்தார் மரம் கண்ணன்.