புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க சாத்தனுார் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குழாய் மூலம் 1.50 டி.எம்.சி., தண்ணீர் உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம், புதுச்சேரி அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆலோசனை கூட்டம்:
புதுச்சேரியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முதன்மையான நீர் ஆதாரமாக விளங்கும் நிலத்தடி நீரில் அதிகப்படியான டி.டி.எஸ். உள்ளது. இதனால் நிலத்தடி நீராதாரத்திலிருந்து நதி நீர் ஆதாரத்திற்கு மாற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனைப்படி தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுக்கும் இடையில் நடந்தது.
இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
முன்பே நீர் திறக்க வேண்டும்:
கடந்த நவம்பர் 30ம் தேதி புயலால் புதுச்சேரி முழுதும் பெய்த மழையாலும், சாத்தனுார், வீடூர் அணைகளில் இருந்து திடீரென அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தென்பெண்ணையாறு, சங்கராபரணி வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தமிழ்நாடு நீர்வளத்துறை, தமிழ்நாடு அரசு இந்த அணைகளில் இருந்து நவம்பர் மாதம் வரை தண்ணீரை முழுதுமாக சேமித்து, நவம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திறந்துவிடாமல், பருவமழை தொடங்குவதற்கு முன்பே தண்ணீரை படிப்படியாக திறந்துவிட வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் புதுச்சேரி பொதுப்பணித் துறைக்கும் இடையே தற்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி விவசாயத் தேவைக்காக ஒவ்வோர் ஆண்டும் ஏழு மாதங்களுக்கு 2,000 கனஅடி வீதம், இரண்டு மாதங்களுக்கு 1,500 கனஅடி வீதம் மொத்தம் 44.70 டி.எம்.சி., வீதம் 9 மாத கால இடைவெளியில் தமிழகம் திறந்துவிட வேண்டும். புதுச்சேரியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க சாத்தனுார் அணையில் இருந்து புதுச்சேரிக்கு குழாய் மூலம் 1.50 டி.எம்.சி., தண்ணீர் உடனடியாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
இதனிடையே, புதுச்சேரியின் மரக்காணத்தில் பகுதியில் உள்ள கழுவேலி ஏரியில், இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நீரை புதுச்சேரி அரசின் குடிநீர் தேவைக்கு உடனடியாக பயன்படுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. வீடூர் அணையின் பழுது மற்றும் சீரமைப்புச் செலவு நிலுவைத் தொகையான ரூ.1.20 கோடியை தமிழக அரசுக்கு புதுச்சேரி அரசு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு அடுத்தக் கூட்டம், தமிழ்நாடு நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலர் தலைமையில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழக நீர்வள தலைமை பொறியாளர்கள் மன்மதன், ஜானகி தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி அரசின் சார்பில், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்பாசன கோட்ட செயற்பொழியாளர் ராதாகிருஷ்ணன், வடிமைப்பு செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.