அண்ணா பல்கலை., போலீசார் குவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்கலை. வளாகத்தில் பணிக்கு வரும் தொழிலாளர்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான பொதுநல வழக்கில், உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம்
தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவரது மனைவி பிரேமலதா உடன் சேர்ந்து, இபிஎஸ், சீமான் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்களும், நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதேநேரம், தேமுதிகவினர் தடையை மீறி பேரணி சென்றதால், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேகர் பாபு மரியாதை
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கலைஞர் இறந்தபோது விஜயகாந்த் வடித்த கண்ணீரை திமுக என்றும் மறக்காது. பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை ஊதி பெரிதாக்க வேண்டாம்" என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கிராம் ஆபரண தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 135 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்பட வாய்ப்பு
இந்தியாவில், ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியை குறைக்க, வரும் மத்திய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல். வரி குறைப்பு திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் லட்சக்கணக்கான நடுத்தர மக்களுக்கு இது பலன் அளிக்கும். குறிப்பாக, நகர்புறங்களில் அதிக வாழ்க்கை செலவினங்களை எதிர்கொண்டு வருபவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது
மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. தொடர்ந்து, 11.45 மணியளவில் அவரது உடல், முழு அரசு மரியாதையுடன் யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை - ரூ.152 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் கடந்த 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் மட்டும் ரூ.152.06 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாகும். அதாவது 24.50 சதவீதம் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. இதில் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் 5 பேர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் பானுபிரதாப்பூரில் இருந்து அந்தகர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் காங்கர் மாவட்டத்தின் அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த இரண்டு பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், கார் ஓட்டுனர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு
ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி புதிய தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு மெஜாரிட்டியை இழந்தது.
கம்பேக் கொடுத்த இந்தியா
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. இருப்பினும் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி 100 ரன்களுக்கும் மேலாக சேர்த்து தொடர்ந்து விளையாடி வருகிறது.