அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம் சாட்டுவதுபோல் உள்ளதாக சாடிய நீதிபதிகள், காவல்நிலையம் வரவே சாமானியர்கள் பயப்படுகின்றனர் என காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.


விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் 


இதில், வழக்குத் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக காவல்துறை தாக்கல் செய்தது.


தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில், ‘’அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை, சிட்டிசன் போர்ட்டலில் 14 பேர் தங்கள் செல்போன் மூலமாக எடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பது கண்டுபிடித்து விட்டோம்’’ என்று அரசுத் தரப்பு கூறியது.


காவல்நிலையம் வரவே சாமானியர்களுக்கு பயம்


எனினும் இணையத்தில் கசிந்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைப் பார்த்த 14 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம் சாட்டுவதுபோல் உள்ளது, காவல்நிலையம் வரவே சாமானியர்கள் பயப்படுகின்றனர் என்று நீதிபதிகள் கடுமையாகப் பேசினர்.


ஞானசேகரனிடம் வேறு மொபைல் இருந்ததா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தொடர்ந்து அரசுத் தரப்பில் கூறும்போது, ’’இந்த விவகாரத்தில் ஆணிவேர் வரை விசாரணை நடத்தப்படும். தற்போது விசாரணை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.


காவல் ஆணையர் சந்திப்பு ஏன்?


செய்தியாளர்களைச் சந்திக்க காவல் ஆணையருக்கு உரிமை உள்ளது. குற்றவாளிகள் யாரையும் காவல்துறை பாதுகாக்கவில்லை என்று தெரிவிக்கவே காவல் ஆணையர் சந்திப்பு நடத்தப்பட்டது. வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்று காவல் ஆணையர் கூறவில்லை. இதுவரை ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரிய வந்துள்ளதாக மட்டுமே தெரிவித்தார்’’ என்று கூறப்பட்டது.


நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரணை நடத்தி வரும் நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பதில் வாதம் செய்து வருகிறார்.